எவர் கண்களிலும் பட்டுவிடாமல்
பெயர நினைத்தோம்.
எனவேதான்
குட்டி யானையில் சாமான்களை ஏற்றிய கையோடு
நீல நிறப் படுதாவால் போர்த்தினோம்.
எங்கள் வாழ்வின்
எந்தப் பொருளேனும் பல்லிளிக்கிறதாவென
எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்த்தோம்
எதுவுமே வெளித் தெரியவில்லை.
அவ்வளவு கச்சிதமாக மூடப்பட்டிருந்தது.
வண்டியிலேறி அமர்ந்தவுடன்
நான் எனது சட்டைக்குள்ளும்
அம்மா அவளது சேலைக்குள்ளும் ஒளிந்துகொள்ள
வாகனம் சிறிய சிணுங்கலுடன் கிளம்பியது.
நினைவுகளுக்குள் சென்று
எதையோ எடுத்து வந்தவளாய்
கம்மிய குரலில்
நத்தை கதையொன்றைச் சொல்வதாகக் கூறி
ஆரம்பித்தாள்.
கதையின் முடிவில் கேட்டேன்,
“அம்மா, நத்தை கதை என்று சொன்னீர்கள்,
ஆனால் இதில் நத்தையே வரவில்லையே”
மகனே, அது
வழியெல்லாம் திரவம் கசிய
வீட்டை முதுகில் சுமந்துகொண்டு
எங்கேயோ போய்க்கொண்டிருக்கும்.
அந்த சனியனுக்கு
அதற்கே நேரம் சரியாகப்போய்விடும்.
அப்புறம் முக்கியமான ஒன்று,
நத்தை கதை எனில்
அதில் கண்டிப்பாக நத்தை இருக்கவேண்டும் என்ற
எந்த அவசியமும் இல்லை.




