எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
வெளிச்சத்தின் உலகிது
வீடு திறந்து கிடப்பதுபோல
இங்கே ஒரு உலகமே
அனாமுத்தாய் திறந்துகிடக்கிறது
முன்பெல்லாம்
எவ்வளவு இன்னல் வந்தாலும்
ஒளிந்துகொள்ள ஒரு இடமிருந்தது
அது ஆறுதலாக இருந்தது
இப்போதோ
இத்தனைப் பெரிய பூமியில்
ஒளிந்துகொள்ள
ஒரு சிற்றிருள் கூட இல்லை
வெளிச்ச வீதியில்
இவ்வுடல் அம்மணத் தேராக
நடந்து சென்றுகொண்டிருக்கிறது.
⦾

illustration : xRebelYellx
ஒய்யாரம்
வெயில்
முகத்தில் கொட்டுவது கூட தெரியாமல்
ராஜ தூக்கம் போட்டுக்கொண்டிருந்தது பூனை
அவ்வழியாகச் சென்றவன்
கடக்க முடியாமல்
ரொம்ப நேரம்
அதன் முகத்தையே
ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்
அவனுள்ளிருந்து ஒரு பிரதி வெளியேறி
ஒரு பெரிய ஆட்டுக் கல்லைத் தூக்கி வந்து
“இன்றோடு ஒழிந்து போ” என்றபடியே
அதன் மீது
“சொத்” என்று போட்டுவிட்டு,
எவ்வளவோ
குட்டிக்கரணங்கள் போட்டும்
எவ்வளவோ
உள்குத்துகள் வாங்கியும்
எனக்குக் கிடைக்காத ஒன்று
எதுவுமே செய்யாத
இந்த தண்டத்திற்கு மட்டும்
எப்படி கிடைக்கலாம்
எப்படி கிடைக்கலாம்
என்று கத்தோ கத்தென்று கத்தியது
சத்தம் ஓயும் முன்பே
அப் பூனை எழுந்து
உடலை நீட்டி வளைத்து
சோம்பல் முறித்து
ஒய்யார நடைபோட்டுச் சென்றது.




