நானொரு கொலைக்கு நிகரான
குற்றச் செயலை புரிவதாக
எண்ணியவர்கள்
குற்றவுணர்வை கிளியெனச் செய்து
என் தோளில் அமர்த்தினார்கள்
பச்சையான
குற்றவுணர்வை சுமந்துகொண்டு
நாளும் திரிந்தேன்
பார்த்தவரெல்லாம் அதன்
பட்டுமேனியை தடவிக்கொடுத்தார்கள்
அதற்கென
சில பழங்களை
தானியங்களைத் தந்தார்கள்
சில சொற்களைச் சொல்லித் தந்து
கேட்டு மெய்மறந்தார்கள்
இனியும் முடியாதென்று
கழுத்தைப் பிடித்து வீச முயன்றபோது
அது தனது நகக் கால்களின் வேர்களை
எனது தோளுக்கடியில்
பலமாகப் பரப்பியிருந்தது
உலகே கூறும்
எனது இரக்கமற்ற மனதை வைத்து
பிறந்ததிலிருந்தே உடனிருக்கும்
எனது கையை
தோள்ப்பட்டையோடு சேர்த்து வெட்டினேன்
அதன்பின் நடந்தேன்
அதுவரை கால்நடுங்க நடந்த
அத்தனைப் பாதைகளிலும்
இரத்தத்தை ஒழுகவிட்டபடி…
இரத்தத்தை ஒழுகவிட்டபடி….




