முதல் நபர்
இரு சக்கர வாகனத்தின் உடைந்த இருக்கையை
டேப்பால் பத்து சுற்று சுற்றி ஒட்டிவிட்டு
விருட்டென்று முடுக்கிப் பறக்கிறார்
இரண்டாம் நபர்
உடைந்த நாற்காலியின் கால்களை
கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு
ஜம்மென்று உட்கார்ந்து
கால்மேல் கால்போட்டு
ரஜினிகாந்தைப் போல பீடியைத் துக்கிப்போட்டு
உதட்டில் கவ்வி பற்ற வைக்கிறார்
மூன்றாம் நபர்
சேலையின் கிழிந்த பாகத்தை
உள்ளே போகும்படி கட்டிவிட்டு
முதுகில் இறக்கைகள் முளைக்க
மிதந்து பறந்து
நடந்து பறந்து
அந்த தேவதை எங்கோ சென்றுகொண்டிருக்கிறாள்
நான்காம் நபர்
இன்னும் மேலே சென்று
செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு
டீக் கடையில் அமர்ந்து
தீப் பறக்கும் விவாதத்தில் ஈடுபடுகிறார்
இடையிடையே
உலகதிரச் சிரிக்கிறார்
கடவுள்
இந்தப் பிடிவாதக்காரர்கள்
என்ன ஆனாலும்
இவ் வாழ்வை
வாழாமல் போகமாட்டார்கள் போல.
0




