அம்மா இறந்த பிறகு
அப்பா
காகத்துக்கு சோறு வைப்பதை
தினப் பழக்கமாகவே கொண்டுவிட்டார்.
எந்தக் காகம் வந்தாலும்
அதனை மல்லிகா என்றழைக்கிறார்
எத்தனைக் காகங்கள் வந்தாலும்
அவ்வளவையுமே மல்லிகா மல்லிகா என்றழைக்கிறார்
போதாக்குறைக்கு
இடுகாட்டிலிருந்து வீட்டை நோக்கி
தினமும் ஒரு புழு வருவதாகவும்
அவை
வழியிலேயே மிதிபட்டுச் சாவதாகவும் கூறி
விம்மி விம்மி அழுகிறார்.
இந்த வயதில் என்னய்யா காதல் வேண்டியதிருக்கிறது
போய் பிழைப்பைப் பாருய்யா
என்று அறிவுரை சொல்ல யாருமில்லை
அவருக்கு நான் இருக்கிறேன்தான்
ஆனால் பாருங்கள்
அறிவுரை சொல்லுமளவுக்கு கிழடுதட்டவில்லை
ஆகவே
அமுக்கிக்கொண்டு நிற்கிறேன்.




