வாழ்வின் மீதான சுயஎள்ளல் என்பது வாழ்வு தருகின்ற அழுத்தத்திற்கு எதிரான ஒரு பலகீன எதிர்ப்பாக மாறுகின்ற கணத்தில் கவிதையானது தனது நிலத்தில், உடல்களில், ஆதார உணர்வுகளில் அதுவரை வெளிப்படுத்திவந்திருந்த அழகுணர்வுக்கு மாற்றான வினோத வடிவங்களை, சௌகரியங்களைத் துண்டிக்கும் விதமான பதற்றங்களைத் தனது குரலாக வெளிப்படுத்தத் துவங்குகிறது.
அத் தனித்துவத்தை வெகுவிரைவில் தன்னில் கண்டுகொள்ளும், தன் அகத்தில் நிகழ்த்திக்கொள்ளும் படைப்பாளி, வாசகனின் அதுவரையிலான பொதுவான வாசிப்புத்தள மதிப்பீட்டை மறுவரையறை செய்ய வைக்கிறான். வாசகன் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வரை கவிஞனுக்கு நேர்கின்ற தனிமையென்னும் நோன்பு மிகமிகத் தீவிரமான ஒன்று.
இத் தொகுப்பில் முழுமைகூடிய, ஒரு சொல்லை நகர்த்தினால்கூட உடைந்து விழக்கூடிய கணிசமான கவிதைகளை வாசித்தபோது, வாழ்வின் அந்தக் கச்சாவான உயிர்த் தருணங்களை இவன் மேலும் மேலும் இப்படிச் சமீபித்துக்கொள்ள வேண்டுமென உள்ளூர மிக விழைந்தேன். கவிதையின் முடிவை ஒரு கேரிகேச்சரைப்போல, கேலியான ஓவியத் தன்மைக்கு மாற்றிவிடுகின்ற நெகிழனது தனித்துவம் சமகால கவிதையுலகின் புதிய பண்புகளில் ஒன்று.
போலவே, தான் தேர்ந்தெடுத்த மையத்தின் அழுத்தம் தாளாது ஒரு நகக்கீற்றலில் வெடித்துவிடும்படி தலைவீங்கி நின்ற சில கவிதைகளை
ஒரு வாசகனாக எலியை விரட்டி விரட்டிச் சுரண்டி மகிழும் பூனையைப்
போல நான் உடைத்து உடைத்து அடுக்கிக்கொண்டிருந்தேன். நெகிழன் போன்ற இடையறாத கவிதை வாசகனுக்கு அந்தச் சிற்சில கவிதைகளை நம்முன் இருந்து வசீகரமாக மறைத்துக்கொள்வது பெரிய விசயமுமல்ல. அப்படி மறைத்துக்கொள்வதன் வழியாக இத் தொகுப்பிற்கு வந்து
சேர்கின்ற வயதான, பொத்தாம்பொதுவான ஒன்றிரண்டு காவிய மதிப்பீடுகளை புறக்கணிப்பதன் வழியாக இத்தொகுப்பிற்கு அவன் நிர்வாணத்தின் முழுமையான அழகை அளிக்கிறான்.




