புகைப்பட உதவி : சந்திரா தங்கராஜ்
இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் கவிதை புத்தகங்களில் கவிஞர் நெகிழனின் “பொக்கை வாய்” கவிதை தொகுப்பு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
எளிய வாழ்வின் துயரங்கள்தான் பாடுபொருள். அன்றாடங்களில் நம் வாழ்நிலைத் துயரங்கள் குறித்தே அதிகம் வெளிப்பட்டிருக்கும் கவிதைகளே அதிகம். ஆனால் நெகிழன் அதை சொல்லியிருக்கும் விதம் முற்றிலும் வேறானது. ஏழ்மையை வலிகளை துயரங்களை கழிவிரக்கம் ஆக்காமல், அதை விநோதமாக்கி அபத்த நகைச்சுவை பாணியில் வெளிப்படுத்தி இருப்பது முற்றிலும் இத்தொகுப்பை புதிதான ஒன்றாக்குகிறது.
பாலங்களுக்காக, சாலை அமைப்பதற்காக அல்லது அதைப் போன்ற அரசாங்க விசயங்களுக்காக மக்களிடமிருந்து குடியிருக்கும் வீடு உட்பட விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. அது வளர்ச்சியின் பலன் என்று அரசாங்கத்தைப் பாராட்டி நாம் எளிமையாக கடந்து செல்கிறோம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் வழியைப் பற்றி நாம் அறிவதில்லை.
அதுபற்றியான சமூக கோபத்தோடு வெளிப்பட்டிருக்கும் ஒரு கவிதையே “கல் நாக்கு”. இது நிலம் இழந்தவர்களின் மிக ஆழமான துயரத்தை வெளிப்படுத்துகிறது. ஆழ்ந்து வாசிக்கப்பட வேண்டிய கவிதை.
வீடு மாறிக்கொண்டே இருக்கும் வாழ்நிலைத் துயரத்தைப் பேசும் “நத்தைக் கதை” என்றொரு கவிதை அழகான கதை சொல்லல் முறையில் எழுதப்பட்டிருப்பது வெகு சிறப்பு. இதில் சிறப்பு என்று எழுதுவதற்கு கூட எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனெனில் அதில் பேசப்பட்டிருப்பது ஆழமான துயரம். துயரம் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வதே இருப்பதிலேயே ஆகத் துயரமானதாகும்.
அதேபோல வெடித்துச் சிரிக்க வைக்கும்படியான பகடியான கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. “வேட விளையாட்டு” அத்தகைய கவிதைதான்.
வேட விளையாட்டு
“தான்தான்
நல்ல விசயமெனக் கூறிக்கொண்டு
மோசமான விசயமும்
தான்தான்
மோசமான விசயமெனக் கூறிக்கொண்டு
நல்ல விசயமும்
வேடம் பூண்டு
என் வீட்டுக்கு வந்தன
வழிப்போக்கன் வேடத்தில்
திண்ணையில் அமர்ந்திருந்த நான்
எழுந்து
பின்புறம் கைகட்டி
தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.”
வாழ்வின் வலியை கவிதைகளில் நேரடியாகச் சொல்வது ஆழமான வலியை ஏற்படுத்தி கண்ணீர் கூட சிந்த வைக்கலாம். ஆனால் நெகிழன் அதையே அபத்த நகைச்சுவையாக்கும்போது நம் மூளையில் இதயத்தில் ஆழமான அடி ஒன்று விழுகிறது. சமூகத்தின் பாராமுகத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தொகுப்பில் மேம்பாலங்களுக்கு கீழ் வசிக்கும் இருவரின் குரலாக ஒலிக்கும் ஒரு கவிதை அத்தகைய அபத்த நகைச்சுவையாகவே வெளிப்படுகிறது.
அதேபோல் வெவ்வேறு வாசிப்புக்கான சாத்தியக் கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கவிதை,
பால பலன்
“தற்கொலை செய்ய முடிவெடுத்தபோது
துளியும் யோசிக்காமல்
வளைத்து வளைத்து
மேம்பாலம் கட்டப்பட்டிருக்கும் சேலத்துக்கு
பேருந்து பிடித்துச் சென்றேன்
எங்கள் ஊரிலிருந்து கிளம்பிவந்து
எத்தனையோ பேர் இப்பாலங்களுக்குப்
பெருமை சேர்த்திருக்கிறார்கள்
இப்போது நானும் அதிலொருவனாய் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்
பாலங்கள் கட்டியவர்களே
நீங்கள் பிறந்ததற்கு நன்றி.”
இக்கவிதையில் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்ள பாலங்களை பயன்படுத்துகிறான் என்பது ஒரு வாசிப்பு. அதுவே அவனிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி அவனை நிலமற்றவனாக்கும் போது அந்த பாலத்தில் நின்று தற்கொலை செய்து கொள்வது இன்னொரு வாசிப்பு. இப்படியான கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
நிறுவன அதிகாரம் போலி வாக்குறுதிகளை கொடுத்து, நம் உழைப்பைச் சுரண்டி நம்மை இயந்திர தன்மைக்கு பழக்கப்படுத்தி, அதையே நம் வாழ்வாக மாற்றும் வித்தையைப் பற்றி பேசும் “ஒளிராத ஒளி” என்ற கவிதை இத்தொகுப்பில் மிக முக்கியமான ஒன்று..
மொத்தமாக நெகிழனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இயங்கும் விதத்தைப் பற்றிச் சொல்வதானால், கவிதையில் ஒரு முனையில் சிரிப்பும் மறுமுனையில் வலியும் நின்று, அபத்த சிரிப்பையும் துயரத்தையும் மாறி மாறி விளையாட்டாக நம் முன் காட்டி நிற்கிறது. இந்தத் தன்மைதான் நமக்குள் இக்கவிதைகள் குறித்து ஆழமான அழுத்தத்தை உருவாக்குகிறது. பல்வேறு வாசிப்புக்கான சாத்தியங்களை வழங்குகிறது.
முடிவாக இவர் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம். கவிதை நம்மை சிரிக்க சிரிக்க வைக்கிறது. ஆனால் அதில் தெரிவது துயரத்தின் பற்கள்தான். அதை பொறுக்கமாட்டாமல் அவற்றை நாம் பிடுங்கி எடுக்கிறோம். பின் அங்கே மிச்சம் இருப்பது வாழ்விழந்த பொக்கை வாய்தான். கடைசியாக இத்தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கவிதையொன்று
ஏந்தலின் ராகம்
“இளமைக் காலம் முதலே
அம்மாவுக்கோர் ஆசையுண்டு
அதை
வெவ்வேறு தருணங்களிலும்
வெவ்வேறு மொழிகளிலும்
கூறியதுமுண்டு
அப்பாவுக்கது பொருட்டாகவேயில்லை
இன்று
யார் யாரையோ
கெஞ்சிக் கூப்பிட்டுப் பார்த்துவிட்டு
கைலி அவிழாதபடி
இறுக முடிச்சிட்டு
தோளில்
வாழை இலைக் கட்டுச் சுமைபோல
இரண்டு மைல் தூரம் தூக்கிக்கொண்டுபோனார்
ஊர் எப்போதும் போல
வேடிக்கையில் ஆழ்ந்திருந்தது.”




