புகைப்பட உதவி : டோனி ப்ரஸ்லர்
அன்பின் நிமித்தம் ஒரு உதவி. அதன் பொருட்டு நிம்மதி. ஒத்தாசைக்கு ஒத்தாசை என்ற பெயரில் உழைப்பில் இணக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
உழைப்பின் வெகுமதிக்கு சில தேவதைகள் தேவைப்பட்டார்கள். மூலதனங்களால் அழகின் ரகசியம் தெரியாமலாக்கப்பட்ட பின்பு உலகை அறியாத சின்னஞ்சிறிய உயிரின் தகவமைப்பை வைத்தே நாம் மகிழ்ச்சிகளை கணக்கிட்டு வருகிறோம். மனதை சிகிச்சைக்கு உட்படும் கருவியாக கலை வெளிப்பாடு ஒரு புறம் சென்றாலும் உண்மையின் விலையை பேரம் பேசவும் அதன் உழைப்பே செலுத்த வேண்டி யிருக்கிறது. உழைப்பை, உழைப்பின் பெயராலேயே சிதைவுக்குள் ஒப்பிட்டு பார்க்கும் சிக்கலின் திட்டம் நெகிழனுக்கு இருக்கிறது. நெகிழனின் மனவிளக்கம் இருண்மையால் பீடிக்கப்பட்டதாய் தோன்றினாலும் ஒளியின் வேகத்தில் வெடிக்கவே உருவாக்கப்படுகிறது. இயற்கையின் இயக்க இயலுக்கு உட்படாத, வேற்று இயந்திர கதியால் சூழ்ந்திருக்கும் வீட்டில் ‘துக்கத்தில் செல்ல குழந்தை நான்’ எனச்சொல்லும் போது ஒளிராத ஒளி ஒளிர்கிறது. தனி மையமாக சுற்றும் ஒவ்வொரு கவிதையும் சில நேரம்…தன்மை தனிமையை போன்ற பாவனைகளை உருவாக்குவதற்கு பிரியப்படுகிறது இருந்தும் மொழியின் வால் அசந்து தூங்கும் பொழுதே கவிதையின் வாய் திறக்கிறது. அதன் வளர்ந்த பெரிய மனிதனுக்கு கிடைக்கப்பெற்ற களிமண்ணினால் ஆனது. களிமண் ஒரு உருவகமாக புரிந்து கொள்ளப்படலாம். தன்னையே தனக்குள் தைத்து கொள்ள உதவுகிற வேலையை அது செய்யலாம். ஒரு பொக்கை வாயும் செய்யலாம்.
⦾
இயன்றவரை
நேசத்தின் மிருதுவான கைகளால்
ஒருவர் கழுத்தை ஒருவர்
போட்டிப் போட்டு
நெரிக்க முயன்றுகொண்டிருந்தோம்
அதுவொரு காலம்
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்
பேருந்து நிலையத்தில்
இருவரும் ஒருவரையொருவர்
ஒரேயொரு கணம்
எதேச்சையாகச் சந்தித்துக்கொண்டோம்
பார்த்துக் கடந்தோம்
எந்த ஜென்மத்திலும்
பார்த்திருக்கவே பார்த்திருக்காத இருவரைப்போல.




