என் இதயத்தில் இருக்கும் அந்த நீலப் பறவை
வெளியே போகவேண்டும் என்றது
நானோ அதனிடம் மிகவும் கண்டிப்பாகச் சொன்னேன்,
“இங்கேயே இரு,
வேறு யாரும் உனைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை”
என் இதயத்தில் இருக்கும் அந்த நீலப் பறவை
வெளியே போகவேண்டும் என்றது
நானோ அதன் மீது விஸ்கியை ஊற்றினேன்
சிகரெட் புகையை உள்ளிழுத்து விட்டேன்.
அது உள்ளிருப்பது
அந்த விலைமாதுகள், பார் குத்தகைதாரர்கள்
மளிகைக்கடைச் சிப்பந்திகள் உட்பட
யாருக்கும் தெரியாது.
என் இதயத்தில் இருக்கும் அந்த நீலப் பறவை
வெளியே போகவேண்டும் என்றது
நானோ அதனிடம் மிகவும் கண்டிப்பாகச் சொன்னேன்,
இங்கேயே இரு,
நீ என்னை குழப்பப் பார்க்கிறாயா?
என் வேலைகளை வீணாக்க நினைக்கிறாயா?
ஐரோப்பாவில் எனது புத்தக விற்பனையை
கெடுக்கப் பார்க்கிறாயா?
என் இதயத்தில் இருக்கும் அந்த நீலப் பறவை
வெளியே போகவேண்டும் என்றது
நானோ மிகவும் சாமர்த்தியசாலி
சிலநேரம் இரவுகளில்
எல்லோரும் தூங்கியபின்
அதை வெளியே அனுப்பினேன்
கவலைப்படாதே,
நீ இங்குதான் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்
என்றுவிட்டு
அதை எடுத்து
திரும்பவும் உள்ளே வைத்தேன்
அது கொஞ்சம் பாடியது.
நானதை இறக்கவிடமாட்டேன் என்கிற
இரகசிய ஒப்பந்தத்துடன்
நாங்கள் ஒன்றாக உறங்குகிறோம்
ஒரு மனிதனை அழவைக்க
இதுவே போதுமானது
ஆனாலும், நான் அழமாட்டேன்
நீங்கள் அழுவீர்களா?




