இத் தொகுப்பின் சரி பாதிக் கவிதைகள் அந்தி, கடல், கரை ஆகியவற்றைச் சுற்றிச் சுற்றியே வலம்வருகின்றன. இவை பகலின் அதீத வெளிச்சத்தை மறுக்கும் பொருட்டு பொழுது மங்கும் மாலையை விரும்பும் மனதின் ஒற்றை விருப்பமாகவே எழுந்து வந்திருக்கின்றன. இவை யாவற்றையும் குரல்களாகக் கணக்கில் கொள்வோமெனில் மொத்தமுமே ஒரே குரல்தான் ஒரே விசயம் தான் என்று உணரவியலும். ஒன்றைச் சொல்லாததும் ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லுதலும் ஒருகோட்டின் வெவ்வேறு முனைகள். சொல்லப்படுபவற்றின் மீது கவனம் குவியும் அதே சமயத்தில் சொல்லப்படாதவற்றின் மீதும் அநிச்சையாக கவனம் குவிகிறது.
முதல் தொகுப்பான கரப்பானியத்தில் இவ்வுலகே அபாயகரமானது துக்ககரமானது இங்கு யாரும் பிறக்கவேண்டாம் எனும் குரல் வலுவாக இருந்தது. இத்தொகுப்பிலும் அப்படியான குரலுடைய கவிதைகள் சில இருக்கின்றன என்றாலும் அவற்றை முந்தையை தொகுப்பின் அல்லது அக்காலகட்டத்தின் அனுபவங்கள் உருவாக்கி வைத்திருந்த வாழ்வின் மீதான பார்வையின் நீட்சியெனவே புரிந்துகொள்கிறேன். (ஊற்று, யானை, வெளிப்படுத்துதல் போன்ற கவிதைகள்)
இங்கு பிறந்ததே துக்கமான நிகழ்வு என்ற மனப்பாங்கிலிருந்து, இங்கு பிறந்துத் தொலைத்ததினால் எதிர்கொள்ளும் இருப்புச் சிக்கல்களை அதன் மூச்சுத் திணறல்களைப் பேசும் இடத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது. (மே16,2020 – விதி – யாராவது இருக்கிறீர்களா? போன்ற கவிதைகள்)
துக்க நெரிசல்களுக்கு மத்தியில் சந்தோஷங்களை நோக்கி நகரும் எத்தனிப்பானது முந்தைய மன அமைப்பான எல்லாமே துக்கமானது தான் என்பதன் குரலை சற்று தளர்த்துவதையும் காண முடிகிறது. (சாவதானம், கண்களும் வெற்றிடமும், ஓராயிரம் மாலைப் பொழுதுகள், உன் பாதை போன்ற கவிதைகள்)
“எனக்கு மனம் கிடைத்துவிட்டதே” என்ற கவிதையில் இடையில் வரும் சில வரிகளை எனக்கு தோன்றுவதுபோல் இடம் மாற்றி அமைக்கிறேன் ;
சிவப்பு மலர் நசுங்கிவிட்டது
………………
இலை மறைவில் கனவு காண்கிறது வண்டு
………………
எவ்வளவு பெய்தால் யாவும் சாந்தப்படுமோ
அவ்வளவு மழை
முன்பு நான் கூறியதைப்போல துக்கம் இருக்கிறதென்று சொல்கிறது அதே நேரம் அதை ஆற்றுப்படுத்து என்றும் கேட்கிறது. இது நானாக வரிகளை மாற்றி அமைத்ததால் உருவானது எனத் தோன்றலாம். அதுதான் உண்மையென்றாலும் கூட நான் சொல்ல வந்தது, இத்தொகுப்பில் விரவிக் கிடக்கும் மனநிலையையே அன்றி இவ்வரிகளை இல்லை.
முதல் தொகுப்பில் இருந்த அளவுக்கு ஆட்கள் நடமாட்டம் இத்தொகுப்பில் இல்லையோ என்ற எண்ணம் வந்துவந்து போனபோது, ஒருசில கவிதைகளில் ஆட்கள் வருவது கூட வெறும் கனவுதானோ என்ற கேள்வியும் வந்தது.
சொல்லப்போனால் இந்த அந்தி கடல் கரை எல்லாமே கற்பனையானதுதான். தானே உருவகித்துக்கொண்ட உலகில் தானே உருவாக்கிய ஒரு அந்தியில் தானே உருவாக்கிய கடற்கரையில் தானே உருவாக்கிய தன்னை தன்னந்தனியாக நடக்கவிட்டு இவ்வாழ்வை தன்னந்தனியாக இரசித்து அனுபவிக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
இவ்வுலகையே நம்பாமல் அதே சமயம் அதன் மீது எவ்வித நேரடிப் புகாருமற்று அதே சமயம் மெல்லியப்புகாரை மட்டும் வைத்துவிட்டு தானுண்டு தானுருவாக்கிய தனது அழகிய உலகுண்டு என அந்தியில் திகழும் கடற்கரையில் நடக்கும் இக் கவிதைகள் தனதனுமதியின்றி தனக்கு வழங்கப்பட்ட சட்டகமிடப்பட்ட இவ்வாழ்வுடன் போராடுவதைக் கைவிட்டுவிட்டு, தானே ஒரு புதிய உலகை உருவாக்கிக்கொண்டு அதில் தன்னையே புதிதாய் பிரசவித்துக்கொண்டு தன் விருப்பப்படியான வாழ்க்கையை தான் நினைக்கும் புள்ளியிலிருந்து துவங்க நினைக்கும் வாழ நினைக்கும் ஒரு மன அமைப்பை நோக்கிச் செல்கிறது என்றே சொல்லலாம்.



