கவிதைகளெனும் பரிசுப் பெட்டிகள்

சில கவிதைகள் படித்தவுடன் புரிகின்றன. பலவும் காலத்தைக் கோருகின்றன. உதாரணத்திற்கு,

“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது”

என்ற பிரமிளின் இக்கவிதையை எடுத்துக்கொள்வோம். இக்கவிதை தொடக்கநிலை வாசகர்களிலிருந்து தீவிர வாசகர்கள் வரைப் புரிந்துகொள்ள முடிவதாய் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு அவருக்கு பிரமிளின் அனைத்துக் கவிதைகளுமே புரிந்துவிடுமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சில கவிதைகள் வாசித்தவுடனே பிடிபடும், சில கவிதைகள் பத்துப் பக்கங்களை வாசித்து பதினோராம் பக்கத்திலுள்ள கவிதையை வாசிக்கையில் அதோடு சேர்த்து அவிழும். இன்னும் சில கவிதைகளோ அதே கவிஞரின் வேறு தொகுப்பை வாசிக்கையிலோ அல்லது சில மாதங்கள் வருடங்கள் கழித்து நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஏற்படும் அனுபவங்கள், வாசிப்பில் கடக்கும் தூரங்கள் என ஏதோ ஒன்றின் போது திறந்துகொள்பவை.

எழுதுவதிலும் சரி வாசிப்பதிலும் சரி கவிதைகள் காலத்தைக் கோருகின்றன. எனவே காலத்தைக் கையளிப்பவர்கள் அதன் வாசகர்களாயிருக்கின்றனர். அவர்களால் மட்டுமே கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. இதில் எனக்கும் கவிதைக்குமான உறவில் கவிதை எனக்குக் கொடுத்த சில பரிசுப் பெட்டிகளைப் பிரித்துக்காட்டி அவற்றில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒவ்வொரு புல்லையும்
பெயர் சொல்லி அழைப்பேன்

– இன்குலாப்

இவ்வரிகள் அகத்துக்குள் அளிக்கும் அனுபவங்கள் அலாதியானவை. புல்வெளி என்று மொத்தத்தையும் ஒரே வட்டத்தில் அடைத்துக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொன்றையும் தனித் தனியே பெயர் சொல்லி அழைத்தால் அது எப்படி இருக்கும். அந்தப் புற்களெல்லாம் எப்படி மகிழும். நினைத்துப் பார்க்கும்போதே புல் வாசம் பக்கத்தில் அடிக்கிறது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றுமே முக்கியமானது, அதனதனளவில் தனித்துவமானது எனும் சிந்தனை ஒரு புல்லான என்னை மிகவும் பரவசப்படுத்துகிறது.

நிலவும் நிலவுகளும்

எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
ஒவ்வொரு இரவும்
எங்களூரில்
ஏழு நிலவுகள் வந்து
அழகு கொள்ளை கொள்ளும்
தண்ணீரில் கல் எறிந்து
ஒரே நிலவை
ஆயிரம் நிலவாய்
ஆக்குவோம் நாங்கள் சிறார்கள்.
வெறுமனே
பொறுமை காத்து
ஆயிரம் நிலவுகள்
ஒரே நிலவாய் கலப்பதை
பார்ப்பார்கள் பெரியவர்கள்
இப்போது ஊருணியை
பஸ் நிலையங்கள்
ஆக்கிவிட்டார்கள். மேலும்
கிணற்றை மூடி
குப்பைத்தொட்டியாக மாற்றி
விட்டார்கள்.
இப்போது
தனியான ஒரு நிலவு
எங்கள் ஊர்
மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

– தேவதச்சன்

பொதுவாக நவீனக் கவிதை சந்திக்கும் பிரச்சினைகளில் தலையாயவை அரசியல், சூழலியல் போன்றவற்றைப் பேசுகையில் பிரச்சார, விழிப்புணர்வு நெடிகள் வராது தவிர்ப்பது. இக்கவிதை அவ்வகையில் மிக முக்கியமானதாக ஆகிறது. கவிதை நிலவை முன்னிலைப்படுத்தியே செயல்பட்டாலும் அது இறுதியில் நம்மிடம் கையளிப்பது நீர்நிலை ஆக்கிரப்புகள் – சூழலியல் அழித்தொழிப்புகளே.
ஒருவேளை நேரடியாகப் பார்த்தால் இன்றைக்கு வாட்ஸ் ஆப் – ல் பகிரப்படும் செய்திபோல தோன்றும் அபாயமும் இருக்கிறது.
இக்கவிதை வழி கூறும் நிலவு கதை உண்மைக் கதை அல்ல, ஒரு புனைவு. இதில் ஒரு நிலவை ஆயிரம் நிலவாக்கி மீண்டும் பழைய மாதிரியே ஒற்றையாக மாற்றித் தனியே விடுகிறார். ஏற்கெனவே நமக்குத் தெரிந்த நிலவும் தனியே இருப்பதுதான். கடைசியாக இவர் காட்டும் நிலவும் தனியே இருப்பதுதான். ஆனால் கவிதை வாசிக்கும் முன்பான தனிக்கும் பின்பான தனிக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. முன்னது எனக்கு அதன் அழகைக் காட்டி நிற்கும். நானதைத் தையல் போலப் பார்ப்பேன். பின்னது ஒருவித கரிசனத்தையும் குற்றவுணர்ச்சியையும் சேர்த்தளிக்கிறது. முன்பிருந்த நிலவின் மீதான உணர்வுநிலை மெலிதிலிருந்து கனத்துக்கு மாறுகிறது. அதாவது ஈன்ற குட்டிகளைப் பிடுங்கி வைத்துக்கொண்டு விரட்டியடிக்கப்பட்ட நாய் தினமும் இரவில் எல்லோரும் தூங்கிய பின் அந்தக் குட்டிகளுள்ள வீட்டையே ஏக்கத்தோடு பார்த்துச் செல்வதுபோன்ற சித்திரம் மனதில் எழுகிறது. இது வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. பூமிக்கே வெளிச்சம் தரும் நிலவுக்குத் தன்னாலான சிறு ஒளியைத் தருகிறது கவிதை. அதன் வழியே மானுட மனங்களை அசைத்துப் பார்க்கிறது. இந்த அசைவில் மரம்போல் நிற்கும் நமக்குள் இருக்கும் இலைகளிலிருந்து சொட்டும் ஈரம் மண்ணை நனைக்கும் என்று கவிதை நம்புகிறது. அவ்வெளிய உயிரியோடு சேர்ந்து நாமும் நம்புவோம்.

சிலிர்க்கச் சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும் அப்பறவைக்கு
துடிக்கத் துடிக்க
ஒரு மீனைப் பிடித்துத்
தருகிறது கடல்.

– ஜெ.பிரான்சிஸ் கிருபா

ஒரு பறவை அதுபாட்டுக்கு வந்து தன் இரையைக் கொத்திச் செல்கிறது. ஒருவேளை அது மீனை நோட்டம் விட்டுக் காத்திருந்திருக்கலாம் அல்லது செத்த மீனை அலை கரையொதுக்க முயற்சித்துக்கொண்டிருந்தபோது கொத்தியிருக்கலாம். இதுதான் எதார்த்தத்தில் நடந்திருக்கக் கூடியது. ஆனால் கவிதையோ அக்கதைகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு நமக்கு வேறொரு கதையைச் சொல்கிறது. அதுவொரு காதல் கதையைப் போல இருக்கிறது. பறவைக்கும் மீனுக்குமான தொடர்பை அறுத்துவிட்டுக் கடலுக்கும் பறவைக்குமான உறவாக மாற்றியமைக்கிறது. பிறகு வெறுமே எடுத்துக்கொள்ளல் எனும் ஒற்றைத் தன்மையிலிருந்து விடுவித்து, கொடுக்கல் வாங்கல் என்பதாக, அன்பின் வெகுமதியாக மாற்றுகிறது. காணும் காட்சியை அப்படியே பதிவு செய்தால் மட்டும் கவிதையாகிவிடாது. கவிஞனின் தலையீட்டினால் அக்காட்சி இன்னொன்றாக மாறுவதே கவிதையின் மிக முக்கியமான அம்சம். அவ்வகையில் இக்கவிதை மிக முக்கியமானதாகிறது.

யானை கட்டி போரடித்தீர்கள் சரி
யாருக்குக் கிடைத்தது
நெல்லுச் சோறு

– வினையன்

காலகாலமாக “யானை கட்டிப் போரடித்த வம்சமடா” என்று பெருமை பீத்திக்கொள்ளும் சொலவடை தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒன்று. இது பரவலாக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்தது. ஒருகட்டத்திற்குப் பிறகு வெவ்வேறு சமூகங்கள் தாம்தான் ஆண்ட பரம்பரைகள் என்பதை அறுவடை செய்ய போட்டாபோட்டிகள் போட ஆரம்பித்துவிட்டன. இச்சூழலில் பொதுபுத்தி கூறும் “யானை கட்டி போரடித்தோம்“ என்பதில் இடையீடு செய்யும் கவிமனம் “சரி யாருக்குக் கிடைத்தது நெல்லுச் சோறு” எனும் கேள்வியை எழுப்புகிறது. ஒரேயொரு வரி இதுவரைக்குமான ஒட்டுமொத்த வெற்று வரலாற்றுப் பெருமைகளையும் யானையாக மாறித் துவம்சம் செய்கிறது. இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது ஒரு சாரார் மட்டுமே பெருமைபட்டுக் கொள்ளக்கூடியதாக இருந்த விஷயத்தை ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானதாகக் கட்டமைத்து இவ்வளவுகாலம் நம்மை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத்தான்.

பூச்சி

உன் இடுப்பிலிருந்து கால்கள் வரை
நான் நெடிய பயணம் செய்ய விரும்புகிறேன்.
நான் ஒரு பூச்சியைவிடச் சிறியவன்.
ஓட்ஸ் தானிய நிறத்திலிருக்கும்
இந்த மலைகளினூடாய் நான் செல்கிறேன்
அவை நான் மட்டுமேயறிந்த
மெலிவான தடயங்கள் கொண்டுள்ளன
பொசுங்கிக் கரிந்து வெளிர்ந்த மனப்பதிவுகள்.
இங்கே உள்ளது ஒரு குன்று.
நான் அதிலிருந்து என்றுமே வெளியேற முடியாது.
ஓ எத்தனை பூதாகரமான பாசிப்படிவுகள்.
ஓர் எரிமலைவாய்,
தீயணைந்த ஒரு ரோஜா.
உன் கால்களின் வழியாக இறங்கி வருகிறேன்
ஒரு சுழலைப் பின்னியபடி அல்லது
செல்வழியில் நான் உன் முட்டிகளிடம் வருகிறேன்
வட்டவடிவத் திண்மைகள்
ஒரு பிரகாசமான கண்டத்தின் கடின மலையுச்சிகளுக்கு வருவதுபோல்.
உன் கால்களை நோக்கி நழுவுகிறேன்
எட்டுத் திறப்புகளுக்கு
உனது கூர்ந்த நிதானமான
தீபகற்பப் பெருவிரல்களிடம்
அவற்றிலிருந்து வெண்ணிறப் போர்வையின்
அதலபாதாளத்தினுள் நான் வீழ்கிறேன்
உனது எரியும் கோப்பைகளின் வளைவினுள்
குருடாகவும் பசித்தும்

– பாப்லோ நெருதா

– தமிழில் – பிரம்மராஜன்

நமக்கு எதிரே உள்ளதைப் பூச்சிபோலச் சிறியதாக்கிப் பார்ப்பது முழுக்க முழுக்க ஒரு அதிகார மனம். இக்கவிதையில் அது அப்படியே தலைகீழ். தானொரு பூச்சியாக மாறித் தனக்கு எதிரேயுள்ளதைப் பல மடங்கு பெரியதாக மாற்றி அதன் பிரமாண்டத்தை அனுபவிக்கிறது கவிமனம். தனக்கு உடல் என்பது, காமம் என்பது எவ்வளவு முக்கியமானது தனக்குள் அது எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் கவிதை இது. ஒரு மனிதன் ஒரு மலையின் கீழ் நின்று அதன் பிரமாண்டத்தை அண்ணாந்து வியப்புறுவதுபோன்ற சித்திரம் இது.

(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்…
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

– பிரமிள்

நிராகரிக்கப்பட்ட காதல் தரும் மன அவசங்களைக் கூறும் கவிதை. அதுவரை இங்கு அறியப்பட்ட காதல்/நிராகரிப்பு கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. புலம்பாமல் மன்றாடாமல் கழிவிரக்கம் கோராமல் அவள் நினைவு தரும் தீராத் தொந்திரவுகளை அழகியலுடன் வெளிப்படுத்துகிறது. காதல் சார்ந்து எழுதும்போது வழக்கமான அதன் சொற் செட்டுகளுக்குச் செல்லாது முற்றிலும் வெளியேறிப் பெயரை அல்லது அவள் நினைவை மண்ணிலிருந்து ஒரு பந்துபோல எறிந்து அதைச் சந்திரகோளத்தில் மோத வைத்து மீண்டும் பூமி வந்து தன் மீது விழுவது போன்று எப்படிச் சிந்திக்கத் தோன்றியது என்று நினைக்க நினைக்கவே அவ்வளவு மிக பிரமிப்பாய் இருக்கிறது.

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?

– முகுந்த் நாகராஜன்

இதுவரை வாழ்வாக நாம் கட்டிவைத்திருக்கும் கண்ணாடி கோபுரம் மீது கல் எறிகிறது.
காரணமற்ற, அர்த்தமற்ற எதையும் நாம் செய்யமாட்டோம். நமக்கு எல்லாவற்றுக்கும் காரணம் வேண்டும். அர்த்தம் வேண்டும். ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல அலுவல் விஷயமாக, நண்பர்களைப் பார்க்க என்று ஏதாவதொரு காரணம் கட்டாயம் தேவைப்படுகிறது. அது எதுவுமின்றி வெறுமே ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நம்மால் செல்ல முடிவதில்லை. உதாரணத்திற்கு வேலை முடிந்து அல்லது விடுமுறை நாளில் ஒரு பேருந்தில் அசதியில் கண்ணயர்ந்துவிடுகிறோம். இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்து பேருந்து செல்கிறது. திடீரென விழித்துக்கொண்டால், நாம் ஏன் அவ்வளவு பதற்றம் கொள்கிறோம். நம்மால் ஏன் இயல்பாக இருக்க முடியவில்லை. மீண்டும் பேருந்தில் ஏறிப்போனால் கிடக்கிறது. காரணம், அர்த்தம், ஆதாயம் அது இதுவெனக் கண்டதையும் உள்ளுக்குள் போட்டுக்கொண்டு நாம் பூமிக்கு வந்த விசயத்தையே மறந்துவிடுகிறோம். எல்லா ஜீவராசிகளையும் போல நாமும் வாழத்தானே வந்தோம். அதைத்தான் இக்கவிதை நமக்கு நியாபகப்படுத்துகிறது.

2023 மார்ச் மாதம் நீலம் இதழில் வெளியானது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x