வெறும் சோற்றுக்கா.. இந்த வாழ்க்கை என்று கேட்பவர்கள் நித்திய பாக்கியவான்கள். வாழ்க வளமுடன். மாறாக வயிற்றால் வாழும் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. வயிறு முட்ட அவமானத்தைத் தின்று கொண்டிருக்க வேண்டும். வாழ்வின் கசப்பை மென்றபடியே எச்சிலூற விலங்கின் கண்களைக் கொண்டிருக்க வேண்டும். கொலை செய்யவும் – திருடவும் யோசிக்க வேண்டும். பிச்சையெடுப்பதையும் சேர்த்து. இந்த வாழ்க்கை வாய்த்தது யாருடைய நற்பலன் என்று கேட்கும் போது, ஆகாயத்தைக் கூர்ந்து பார்த்து அதுவரையிலும் போதிக்கப்பட்ட கடவுள்களை அவர்தம் மனைவிகளை பிள்ளைகளை வசைபாடவேண்டும். அவ்வளவுதான்.
செத்த வாழ்க்கையை உயிருடன் தின்று கழிக்கும் போது நெஞ்சு எதுக்களிக்கும். செரிப்பதற்குத் கருத்த தோலோடு காய்ந்திருக்கும் வீறிட்டலறும் நோஞ்சான் வாழைப்பழமென குழந்தை இருக்கிறது. விழுங்கு.
கலையின் ஆகச்சிறந்த வெளிச்சத்தையும்-இருளையும் அறிமுகப்படுத்தும் நெகிழனின் கவிதைகள் நூற்றாண்டுகள் கடந்து வாழும். மிகையற்ற சொற்களால், பாவனைகளற்று இன்னும் எழுதுவதற்கு வாழ்வும் வாழமுடியா தூரமும் உள்ளன என நெகிழன் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
ஒன்று
தூக்கி வீசப்பட்டத் தீப்பெட்டி எங்கள் வீடு
நானும் அவளும் மரக்குச்சிகள்
குழந்தைகளோ
தவறுதலாய் பெட்டி மாறி வந்துவிட்ட மெழுகுக் குச்சிகள்
குளிர்கால இரவுகளில்
நாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் ஈர முத்தங்கள்
அலாதியானவை
செவ்வ உலகில்
காகித வானத்தில்
நாங்கள் பார்த்ததேயில்லை
நிலவை
சூரியனை
நட்சத்திரங்களை
யாரோ ஒருவர்
வாயில் பீடியை வைத்துக்கொண்டு
எங்கள் வீடு நோக்கி வருகிறார்
வீட்டைத் தூக்கி
முதலில்
மகனை வெளியேற்றி உரச
பிறகு மகளை
மனைவியை
கடையாக என்னை
முதல் உரசலிலேயே…
சரிதான்
இதென்ன கதை
எரியத்தானே பிறந்தோம்.
இரண்டு
எங்கள் ஊரில்
ஒரு புகழ்பெற்றக் கிணறிருக்கிறது
நீர் கீழிறங்கும்போதெல்லாம்
ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார்
நீர் சற்று மேலெழும்
ஒவ்வொரு மாதமும் இப்படித்தான்
போனமாதம்
ரொம்பவும் கீழே போய்விட
ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது
ஒவ்வொருமுறையும் நீருக்குள் போகிறவர்கள்
அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள்
அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்
ஊற்றாய் மாறுகிறார்கள்
பின் மெல்ல மேலெழும்பி
நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.
மூன்று
முதலில் தொடங்கி வைத்தது தவழும் மகன்தான்
அவன்தான் முதலில் சுவரை நக்கினான்
பின்னாளில் மகளும் சேர்ந்துகொண்டாள்
ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத மனைவி
காரைகளைப் பெயர்த்து வாயில் அதக்கிக் கொண்டு
சிரிப்போடு கடந்தாள்
பிறகவள்
முறுக்கு போல் ஊறவிட்டு
சத்தமின்றி மெல்லவும் பழகிக்கொண்டாள்
எல்லோரும் தூங்கிய இரவில்
சத்தமின்றி எழுந்த நான்
ஒரு முழுச்செங்கலையே உருவி
ஈயக்குண்டானில் வேகவைத்தேன்.
வாழ்ந்து முடிந்த வார்த்தைகளை செரிக்கமுடியாத சொற்களாக்கியிருக்கிறார் நெகிழன். நெகிழனின் உலகம் உங்களை இருகரம் கூப்பி பசியோடு வரவேற்கிறது. இக்கவிதைகள் குறித்து மிக விரிவாக எழுதுவேன். இப்போதைக்கு இவ்வளவே.
நெகிழன்… உங்களது கவிதைகளை வாசிக்கையில் கவி ஐயப்பனின் நினைவு மனதில் எரிந்தது. அவனது கவிதையையும் இறுதியாக இணைத்திருக்கிறேன். அவனது மதுவாடையடிக்கும் சுட்டுவிரல் சற்று நடுக்கத்தோடு உங்களை எனக்குச் சுட்டியது. அய்யப்பனின் முத்தங்களும் ஆசிகளும் உங்களுக்குக் கிட்டுவதாக. எனது முத்தங்கள் எப்பொழுதும்…
இரவுணவு – ஏ.அய்யப்பன்
(மொழிபெயர்ப்பு- ஜெயமோகன்)
கார்விபத்தில் இறந்த வழிப்போக்கனின்
ரத்தம் மிதித்து கூட்டம் நிற்க
செத்தவன் பையிலிருந்து பறந்த
ஐந்துரூபாய் நோட்டில் இருந்தது என் கண்.
நான் இருந்தும் தாலி அறுத்த மனைவி.
என் குழந்தைகளோ
பசியின் நினைவுப்பொம்மைகள்.
இன்றிரவு இரவுணவின் ருசியுடன்
என் குழந்தைகள் உறங்கும்.
என் மனைவிக்கும் எனக்கும்
அரைவயிறு ஆனந்தம்.
செத்தவனின் பிணப்பரிசோதனையோ அடக்கமோ
இந்நேரம் முடிந்திருக்கும்.
நினைத்துக் கொண்டேன்
ரத்தம் மிதித்து நின்ற கால்களை.
வாழ்பவர்களுக்கு வாய்க்கரிசியிட்டு
செத்தவனை.
பூஜ்ய விலாசம் – நெகிழன்
பக்கங்கள்:64
விலை:80
மணல் வீடு வெளியீடு.




