அப்பா சொன்னார்,
உன் அம்மா
சாவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால்
என்னை துவைப்பறைக்குள் கூட்டிச் சென்று
துவைப்பது எப்படி என்று காண்பித்தாள்.
என்னுடைய ஐந்து அரைக் கால்சட்டைகளையும்
உள்ளே போடச் சொன்னவள்,
அழுத்தவேண்டிய பொத்தானைக் காட்டினாள்.
மாடிக்கு போகக் கூடாதென்றும்
இயந்திரம் வேலையை முடிக்கும்வரை
காத்திருக்க வேண்டுமென்றும் கூறினாள்.
அவ்வொளிர்வு
காரின் பின்புறமுள்ள
அபாய விளக்கைப் போல் இருந்தது.
அதன் பிறகு,
ட்ரையரை எப்படி இயக்குவது என்று காட்டினாள்.
அவளுக்கு வேண்டியதெல்லாம்
நான் யாரையும் சாராமல்
தனித்து வாழவேண்டும் என்பதுதான்.
அது வேலை செய்கிறது.
நான் மீண்டும் கல்யாணம் செய்யவேண்டிய
அவசியமில்லை.




