Illustration : Iker Ayestaran
அப்பா சொன்னார்,
உன் அம்மாவும் நானும்
திரையரங்குக்குச் சென்றோம்
கூட்டம் நிரம்பிவிட்டதால்
தனி இருக்கைகள்தான்
இருக்கின்றன என்றார்கள்.
நாங்கள் தனித் தனியாக உட்கார ஒப்புக்கொண்டோம்.
நான் அவளது டிக்கட்டை
அவளிடம் கொடுக்க மறந்துவிட்டேன்.
இரண்டு பெண்களுக்கிடையில் இருந்த
என் இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்துவிட்டேன்.
டிக்கெட் பரிசோதகர்
உன் அம்மாவை உள்ளே விடவில்லை.
படம் போட்டு அரை மணிநேரத்திற்குப் பின்
டார்ச் லைட் வைத்திருக்கும்
இரண்டு பரிசோதகர்களுக்கிடையே
உன் அம்மா நடந்து வருவதைப் பார்த்தேன்.
நான் இரண்டு பெண்களுக்கிடையில்
அமர்ந்துகொண்டு
பாப்கார்ன் சாப்பிடுவதையும்
சிரிப்பதையும் அவள் பார்த்தாள்.
அது ஒரு நகைச்சுவை என்பதால்
நான் அழவில்லை.
இரண்டு வாரங்களாகியும்
என்னால்
அந்த நகைச்சுவையின்
முடிவைக் கேட்க முடியவில்லை.




