மூன்று சப்பாத்துகளின் கதை – மதார்

ஓடும் ஆற்றின்
இதயத் துடிப்பை அறிய
நாம் கையில்
ஒரு மீனைப் பிடிக்க வேண்டும்.

– நெகிழன்

நெகிழனின் “மூன்று சப்பாத்துகளின் கதை” கவிதை தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பு பூஜ்ய விலாசம். தொகுப்பின் நிறைய கவிதைகளில் நெகிழன் துயரத்திடம் சேட்டை செய்கிறார். அதுவே அவரது கவிதைகளுக்கு தனியொரு நிறத்தை அளிக்கிறது. தலையைத் திருகிவிடுவேன் என்ற குரல் நெகிழன் கவிதைகளில் வன்முறையாக அல்லாமல் சேட்டையாகவே ஒலிக்கிறது. அதன் வழி நெகிழன் தன் கவிதைகளின் வழியே ஒரு விளையாட்டை நிகழ்த்திப் பார்க்கிறார். பூஜ்ய விலாஸம் தொகுப்பில் செங்கல்லை தின்னும் கவிதை முக்கியமானது. மூன்று சப்பாத்துகளின் கதை தொகுப்பிலும் குறித்து வைக்கும்படியான கவிதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில

யாரும் ஏந்தாத சில விரல்கள்

ஒருநாள் மலைக்கு
தலையும் கைகால்களும் முளைத்தன
ஒரு கணம் அது
எழுந்து நின்று
கால் மடிய
தன் காலடியில் வளர்ந்த
ஒரு சிறிய செடியின் முன்
மண்டியிட்டது.
ஒவ்வொரு கையிலும்
பூக்களை விரல்களாகப் பெற்ற
அச்சின்னஞ் சிறிய செடி
மலையின் முகத்தை
ஆசையோடு வருடிவிட்டது
அப்போது உண்டான சிலிர்ப்பில்
அதுவரை
யாருமே ஏந்தாத சில விரல்கள்
உதிர்ந்தன.

சால்னாவின் வாசம்

மணி பத்து
எல்லோரும் தூங்கிவிட்டார்கள்
ஒன்பது வரை
சிமினி விளக்கை ஒளிரவிடும்
முனியம்மாள் கிழவி
மதியமே
மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்
திருட்டுக் கால்களால்
மெது மெதுவாய் நடந்துவந்து
கதவைத் தட்டியது
புரோட்டாவின் சால்னா வாசம்
அது
உலகின் மிக மெல்லிய ஒலி.

அதிசய மரம்

சாக்கடையோரம் கிடந்தவனை
தூக்கிச் சென்று
மரத்தடியில் கிடத்துகிறான்
தூரத்தில் நின்றுகொண்டு
போவோரிடமும் வருவோரிடமும்
சொல்கிறான்
அங்கே பாருங்கள்
அந்த அதிசய மரம்
தனக்குக் கீழே
நிறைய இலைகளையும்
ஒரு மனிதனையும்
உதிர்த்திருக்கிறது.

என்றாகிவிட்டது

சற்றே குரலவிழ்த்து
தேநீரில் சக்கரையில்லை என்றேன்
கோபித்துக்கொண்டு
கரும்புக் காட்டுக்குள் புகுந்துவிட்டாள்
தன்னைக் கரும்பென
நம்பிவிட்டவளை அழைத்துவர
அறுவடைக் காலம்வரை
காத்திருக்கும்படியாயிற்று
நாளடைவில்
வார்த்தைகளை
எச்சிலில் கரைக்கும் வித்தையை
கற்றுக்கொண்டேன்
இருந்தும் ஒருநாள்
மறதியாய்
குழம்பில் உப்பில்லை என்றேன்
பாவிமகள்
கடலுக்குள் இறங்கிவிட்டாள்
நீருக்கடியில் மீனென நீந்திக் கிடந்தவளை
வலை வீசிப் பிடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது.

வெட்க ராணி

எனைக் கண்டதும்
வெட்கம் ஒரு முயலாக மாறி
உன் முகத்திலிருந்து
எகிறிக் குதித்தோடுகிறது
ராணி,
உனக்கு ஆட்சேபனை இல்லையெனில்
கொஞ்சம் அமைதியாய்
இங்கேயே அமர்ந்திரு
நானதன் காதைப் பிடித்துத்
தூக்கிக்கொண்டு வந்து
உன் மடியில் போடுகிறேன்.

நன்றி : www.kavithaigal.in

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x