வாய்வு – புக்கோவ்ஸ்கி

Illustration : Carlos D. Salazar

எனது பாட்டிக்கு கடுமையான வாய்வுப் பிரச்சினை.
நாங்கள் அவளை ஞாயிறன்று மட்டுமே பார்க்கப்போவோம்

அவள் இரவுணவுக்கு உட்கார்ந்தாள்
அவளுக்கு வாய்வு
மிகவும் பருமனாக இருந்தாள், 80 வயது
பெரிய கண்ணாடிக் கற்கள் பதித்த அட்டிகை அணிந்திருந்தாள்
வாய்வைத் தவிர
நீங்கள் அதிகமாக பார்த்தது அதைத்தான்.
உணவு பரிமாறுவதற்குள் அவளதை விட்டுவிடுவாள்
நிமிசத்துக்கொரு முறை
அவளதை வெடித்து விட்டுவிடுவாள்.

நாங்கள்
உருளைக்கிழங்கிடம் சென்று
குழம்பை ஊற்றி
இறைச்சியை நறுக்குவதற்குள்ளாக
4 அல்லது 5 முறையேனும்
அவளதை விட்டுவிடுவாள்.

யாரும் எதுவும் சொல்லவில்லை
குறிப்பாக நான்.
எனக்கு 6வயது.
என் பாட்டி மட்டுமே பேசினாள்.

4அல்லது 5 முறை வெடித்துவிட்ட பின்
அவள் சாதாரணமாகச் சொன்னாள்,
“நான் உங்களுக்கு சமாதி கட்டிவிடுவேன் போல”

எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
முதல் குசுவுக்குப் பின்
அதைச் சொன்னது

இது எல்லா ஞாயிறும் நடந்தது.
அவள் எனது அப்பாவின் அம்மா.

ஒவ்வொரு ஞாயிறும்
சாவு வாய்வு
நசித்த உருளைக்கிழங்குகள் குழம்பு
அந்த கண்ணாடிக் கற்கள் பதித்த பெரிய அட்டிகை.

அந்த ஞாயிறு இரவுணவுகள்
எப்போதும் ஆப்பிள் பையும் ஐஸ் கிரீமும்
ஏதோ ஒன்றைப் பற்றியோ அல்லது யாரோ ஒருவரைப் பற்றியோ
ஒரு பெரிய விவாதம் நடக்கும்

இறுதியில் எனது பாட்டி
கதவுக்கு வெளியே ஓடுகிறாள்
சிவப்பு இரயில் ஏறி மீண்டும் பசடெனாவுக்கு திரும்புவதுபோல

மணிக்கணக்கில் அந்த இடமே நாறிக்கொண்டிருந்தது
எனது அப்பா செய்தித்தாளை விசிறியென வீசிக்கொண்டே சொன்னார்,

“இது எல்லாமே அந்த நாசமாய்ப்போன சாவ்ர்க்ரட்டை
அவள் தின்றுதொலைத்ததால்தான்”

*Pasadena – என்பது கலிபோர்னியாவில் உள்ள ஒரு நகரம்.

*Apple Pie

*sauerkraut

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x