ஒரு கவிதையின் மீதான சிறிய உரையாடல்

Illustration : Keith Negley

வழமையான சராசரி நாளில், எவ்வித முன் திட்டமுமின்றி எனக்கும் நண்பர் தங்கபாலுக்கும் மிக எதேச்சையாக தொடங்கிய உரையாடலே இது. மீள ஒருமுறை மொத்தத்தையும் வாசித்தபோது இது தன்னளவில் ஒரு சிறிய தீவிரத்தை வைத்திருப்பதாகத் தோன்றியது. அவ்வெண்ணத் தோன்றலே இதை பொதுவில் வைப்பதற்கான தூண்டுதலை அளித்தது.

உரையாடலுக்கு எடுத்துக்கொண்ட கவிதை

மூலம் : மிலரேபா

தமிழில் : க.மோகனரங்கன்

உங்களுடைய
எண்ணங்களுக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடும்போது,
நீங்கள் குச்சியைத் துரத்தும்
ஒரு நாய் போல இருக்கிறீர்கள்:
ஒவ்வொரு முறை
ஒரு குச்சி எறியப்படும் போதும்,
நீங்கள் அதனைத் தொடர்ந்து வேகமாக ஓடுகிறீர்கள்.
மாறாக,
ஒரு சிங்கத்தைப் போலிருக்க
நீங்கள் முயலுங்கள்.
குச்சியைத் துரத்துவதை விட்டுவிட்டு, எறிபவரை நோக்கியே அது
தன் கவனத்தை திருப்புகிறது.
ஒருவரால் சிங்கத்தின் மீது
ஒருமுறை மாத்திரமே குச்சியை எறியவியலும்.

தங்கபாலு : நல்ல கவிதை நண்பா

நெகிழன் : அறிவுரை பாணி கவிதை, நன்றாக இருக்கிறது நண்பா

தங்கபாலு :

எழுதுதல் என்பது, சொல்லுதல் தானே. சில சமயங்களில் அறிவு, சில சமயங்களில் அனுபவம் இப்படியாக… ஆனலும் இதை அறிவுரை கவிதையாகக் கொள்ள முடியவில்லையே.
தற்விழிப்பு அல்லது தத்துவ விழிப்பு

நெகிழன் : இதிலுள்ள தொனி அப்படித்தானே இருக்கிறது.

தங்கபாலு : ஆமாம் நண்பா

நெகிழன் :

நான் குறிப்பிட்டது இதன் கூறுமுறையில் பகிரங்கமாக வெளிப்படும் தொனியை மட்டுமே. இதனால் அதன் விசய ஆழத்தை விமர்சிக்கிறேன் என்றில்லை. இதுவொரு அவதானிப்பு மட்டுமே. சின்னதாக பகுத்துப் பார்த்துக்கொண்டேன்.

இக் கவிதை, எண்ணங்களுக்குப் பின் ஓடுவதை விட்டு அதை உருவாக்கிய மூலத்தை நோக்கி நம் பார்வையைத் திருப்பவேண்டும் என்கிறது. இதுவொரு அனுபவத்தின்பால் உண்டான தத்துவ விசாரத்தின் நிதானமான மனதால் அணுக வேண்டியது. ஆனால் இது யாவருக்கும் சாத்தியமான இடமல்ல. இதை இவ்வாறு பார்க்கும் ஆழமான அனுபவங்கள் யாருக்கெல்லாம் உண்டாகிறதோ அவர்களாலேயே இது முழுதாக உள்வாங்கப்படும். மற்றவர்க்கு கணநேர சிலிர்ப்பை மாத்திரம் உண்டு பண்ணிவிட்டு மறைந்துவிடும்.

நாம் சிங்கமாவதைக்காட்டிலும், நாம் நாயென்று தெரிந்துகொள்வதற்கே நெடுங்காலமாகிவிடுகிறது. என்னைப்பொருத்தமட்டில் நாம் நாய் என்று தெரிந்துகொண்டாலே பெரிய விஷயம்தான்.

தங்கபாலு :

அருமையான வாசிப்பு நண்பா, இதையே விரும்பினேன். இன்று கூட பிழைப்புவாதத்தில் நாம் நாய் தான். இந்த இடத்தில் சிங்கமாவது என்பது தன்விழிப்பால் நிகழ்வது.. அதுவும் நிறைய துரத்தல்களுக்கு ஆளான ஒரு மனம் அடையும் விழிப்பு என்பது அசாதாரணமானது. அந்த வகை வாசிப்பு நோக்கில் இந்த கவிதை அடையும் பேருரு… அபாரமானது நண்பா. மேலும், துரத்தல் என்பது ஒரு ‘மனநோய்க் கூறு’.

நெகிழன்:

நான் ரவுண்டானா கவிதையில் இதைத்தானே எழுதியிருக்கிறேன்

தங்கபாலு :

சரியே, ஏனோ இந்தக் கவிதை வாசித்த அந்த கணத்தில் ஒரு பரவசம் தந்தது..

நெகிழன்:

நாம் நாயென்று தெரிந்துகொள்ளுமளவாவது தெளிவிருந்தாலே போதுமானது. சிங்கமாக இதனினும் அசாத்திய பலம் தேவை.

தங்கபாலு :

இல்லை, ஒன்றில் நிறைவடைவது ஒரு தடையே. தேடல் முடிவற்றது. அப்புறம் நாய், சிங்கம் இன்னும் எத்தனை உள்ளதோ அது பூராவும் அந்தந்த நேரத்து இசைவு அல்லது நகர்வு. மனம் என்பது இயங்குவது அது தேவையான போதில் தேவையான பாத்திரத்தை தானே அடைந்து தானே உடைந்து கொள்ளும்.. மனதிற்கு ஒற்றை வாத ரோல் அளிப்பது தேவையற்றது என்றே படுகிறது.

நெகிழன்:

நான் நிறைவு குறித்தோ நிறைவின்மை குறித்தோ பேசவில்லை. நாயாய் இருக்க நாம் எந்த பிரயத்தனத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல சிங்கமாக இருக்கவும் எந்த பிரயத்தனமும் தேவையில்லையா என்ன?

சரி, நாய் சிங்கம் என்பதை விட்டுத் தள்ளுவோம்.

எண்ணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் நாம் எந்த புள்ளியிலும் அதை உணர்வதே இல்லை. இப்படியான ஒரு Art தான் அதை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இதில் நாம் செய்ததென்ன. நாம் நமது அகத்தை எப்போதாவது கண்காணிப்பவராக இருந்திருக்கிறோமா?

Art சொன்னது அதை நாம் தெரிந்துகொண்டோம். சரி, அடுத்த நிலையான, அதன் மூல இயக்கத்தை நோக்கி நகர நாம் மேற்கொள்ளும் செயலாக்கங்கள் என்ன?

ஒரு விசயத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும். நாம் அதைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. கண்டுபிடித்து ஒருவர் சொன்னபோது அதை புரிந்துகொண்டு வெறுமே ஆமாம் போட்டவர்கள் மட்டுமே.

தங்கபாலு :

எப்போது ஒருவருக்கு இந்த கவிதையின் உள்ளீடு பிடிபடுகிறதோ, அப்போதே தன்னுணர்வு பற்றிய விழிப்புணர்வு உள்ளதாகவே கொள்ள முடியும். ஒருவகையில் உங்கள் கூற்று சரிதான். விழிப்புணர்வைக் கையாள்வதில் சுணக்கம் இருக்கலாம்…
என்னளவில் விழிப்பு எத்தனைத் தேவையோ வெகுளியும் அத்தனைத் தேவையான ஒன்று தான்… சில சமயங்களில்.

நெகிழன்:

வெகுளிக்கும் அறியாமைக்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை வெகுளித்தனமென கொண்டால், ஒட்டுமொத்த மானுட சமுதாயமே வெகுளிகள் எனப் பொருள்படக்கூடிய அபாயமும் இருக்கிறது.

1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x