…………………………………………………………………………………………………
கவிதையின் தலைப்பு ‘Just another Wino”
வீடின்றி குடித்துக்கொண்டு சாலையோரம்
வசிப்பவர்களை அவர்கள் வினோ
என்று குறிப்பிடுகிறார்கள். அவ் வாழ்க்கைமுறையே
குடியோடு இயைந்து முயங்கிய ஒன்றுதான்.
அவ் வாழ்க்கைமுறை இங்கில்லாததால்
அதற்கான சரியான சொல்லைப் பயன்படுத்தவில்லை.
மிகவும் வலிந்து செய்யவேண்டாமென்றுதான்
வினோ என்பதை சாலைவாசி என்று தமிழ்ப்படுத்திருக்கிறேன்.
…………………………………………………………………………………………………
அந்தப் பையனுக்கு இருபது வயது.
ஐந்தாறு வருடங்களாக சாலையோரம் இருக்கிறான்
சோபாவில் அமர்ந்தபடி
எனது பீரைக் குடித்துக்கொண்டிருந்தான்.
அவனது பெயர் ரெட்
அவன் சாலை குறித்துப் பேசினான் :
“அவர்கள் இருவரும்
என்னை நல்லபடியாக நடத்தவேண்டுமென்றால்,
சத்தம்போடாமல்
அமைதியாக இருக்கச் சொன்னார்கள்,
ஏனெனில் நான்
அவர்கள் ஒருவனைக் கொல்வதைப் பார்த்தேன்”
“ஒருவனைக் கொன்றார்களா? எப்படி”
“கல்லால்”
“எதற்காக”
“அவனும் சாலைவாசி தான்.
அவன் ஒரு பர்ஸ் வைத்திருந்தான்.
அது நல்ல பர்ஸ்.
அதில் அறுநூறு ரூபாய் இருந்தது.
அவன் நல்ல குடிபோதையில் இருந்தபோது
கல்லால் தாக்கியே
அவர்கள் அவனது மூளையை வெளியேற்றினார்கள்”
“நீ அதைப் பார்த்தாயா?”
“நான் அதைப் பார்த்தேன்.
அதற்கடுத்து ரயில் நின்றபோது,
அவனைத் தூக்கி வெளியே வீசினார்கள்,
உயரமான புற்களுக்குள் எறிந்தார்கள்.
பிறகு
மீண்டும் இரயில் புறப்பட்டது”
நான் அந்தப் பையனுக்கு இன்னொரு பீரைத் தந்தேன்.
“கந்தல் உடையிலிருந்த அவர்களை
போலிசார் கண்டுபிடித்தபோது,
போதைமுகமுடைய அவர்களிடம்
எதையும் விசாரிக்காமல்,
அலட்சியத் தொனியில்,
“இன்னுமொரு சாலைவாசிதானே”
என்று சொன்னவர்கள்
அதன்பின் கண்டுகொள்ளவேயில்லை.
அவர்கள் அதை மறந்தேவிட்டார்கள்”
நள்ளிரவு வரை
நாங்கள் சாலை குறித்தே பேசிக்கொண்டிருந்தோம்.
நான் அவனிடம்
எனது சொந்த கதைகள் சிலவற்றை சொன்னேன்.
பின்னர் நான் படுக்கைக்குச் சென்றேன்.
அவன் ஷோபாவிலேயே தூங்கினான்.
நானும் மனைவியும் குழந்தையும்
படுக்கையறைக்குள் உறங்கினோம்.
காலையில் நான் எழுந்து
சிறுநீர் கழிக்கச் சென்றபோது
ரெட் நாற்காலியில் அமர்ந்தபடி
நேற்றைய செய்தித் தாளை வாசித்துக்கொண்டிருந்தான்.
“நான் கிளம்புகிறேன், இதற்குமேல் என்னால் தூங்கமுடியாது
என்றாலும், எனக்கு நல்ல இரவாக அமைந்தது.
சில நல்ல உரையாடல் நிகழ்ந்தது. நன்றி”
“எனக்கும்தான் ரெட், இப்போது பரவாயில்லையா”
“ரொம்பவே…”
பிறகவன் கதவைத் திறந்து வெளியேறி
வீதியிலிறங்கிச் சென்றான்.
படுக்கையறைக்குத் திரும்பியபோது
அவள் கேட்டாள்,
“ ரெட் போய்விட்டானா”
“ஆமாம்”
“எங்கு போவான்”
“எனக்குத் தெரியவில்லை.
டெக்சாஸ். நரகம் அல்லது பாஸ்டன் என
எங்குவேண்டுமானாலும்”
குட்டிக் குழந்தை விழித்துக்கொண்டாள் :
“பால் வேண்டும்”
“கொஞ்சம் எழுந்துசென்று
பால் டப்பாவை எடுத்து வருகிறாயா”
“நிச்சயமாக”
நான் சமையலறைக்குச் சென்று பாலை ஊற்றினேன்.
கொடூரமும் கொடூரமற்றவையும்
சிலந்திகள், பிருஷ்டங்கள், சிப்பாய்கள், சூதாடிகள்,
பைத்தியக்காரர்கள், வேலைக்காரர்கள்,
கடினமாக உழைப்பவர்கள், தீயணைப்பு வீரர்,
என
எல்லோர் மத்தியிலும் நடந்துகொண்டிருக்கின்றன.
நான் மீண்டும் சென்று
குழந்தையின் கையில்
பால் டப்பாவைக் கொடுத்துவிட்டு
கட்டிலில் அமர்ந்தேன்
குழந்தை உறிஞ்சுவதைக் கேட்டேன்,
சப் சப் சப்…
சீக்கிரம் நாங்கள்
எங்களுக்கான காலை உணவை
சமைத்தாகவேண்டும்.




