ஆரோக்கிய விடுதியிலிருந்து
வெளியேறிய பின்
உலகிலுள்ள
எல்லாவித பலவீனங்களும்
படை திரண்டு வந்து
என்னை ஆக்கிரமித்துவிட்டன
முன்புபோல என்னால்
குனிய முடியவில்லை
விரல்களை மடக்க முடியவில்லை
எனதுலகில் துகள்களாக இருந்தவையெல்லாம்
இப்போது மலையாக மாறிவிட்டன
வண்டியை முறுக்கிக்கொண்டு சென்ற
எல்லா இடங்களுக்கும்
குண்டியை தூக்கிக்கொண்டு
தவழ்ந்துகொண்டே செல்கிறேன்
வழியெங்கும் புள்ளி வைத்தாற்போல்
கிடக்கும் மாத்திரைகளை
ஒவ்வொன்றாக விழுங்குகிறேன்
அபார சக்தி வருகிறது
எழுந்து நிற்கிறேன்
விரல்களை மடக்குகிறேன்
எதிரில் உள்ள யாவற்றையும்
அடித்து நொறுக்கி
துவம்சம் செய்துவிட்டு
வீறு நடை போட நினைக்கிறேன்
இடையூராக
சூத்திலிருந்து தொங்குவதை
உள்ளே போ என்றேன்
உடனே
உள்ளே போய்விட்டது
ஒருவேளை அது
உள்ளே போகவில்லையெனில்
தோள் மீது போட்டுக்கொண்டு போகலாம் என்றிருந்தேன்
மகிழ்ச்சி.
0
டாடா
நல்ல வேளை
நான் சிக்கிக்கொண்டிருப்பவற்றிலிருந்து
எனை மீட்டெடுக்கும்
எந்த எண்ணமும்
என் உறவினர்களுக்கோ
நண்பர்களுக்கோ
அவ்வளவு ஏன்
மனைவிக்கோ கூட இல்லை.
நான் நாசமாய் போகவும்
அழிந்துபோகவும்
இதைவிடவும்
ஏதுவான சூழல் அமையாது
என்று எண்ணுகையில்
சிலர்,
உன் மனைவியையும் பிள்ளைகளையும்
துள்ளத் துடிக்க விட்டுப்போய்விடாதே
என்று
அறிவுரை சேவை செய்கிறார்கள்
நானதை பொருட்படுத்துகிறேன்
இரவு பகலாக சிந்திக்கிறேன்
உண்மைதான்
அவர்கள் ஒன்றோ இரண்டோ நாட்கள்
துடிப்பார்கள்தான்
ஆனால்
அதற்காகவெல்லாம்
நான் ஏன்
என் வாழ்நாள் முழுக்கவும் துடிக்கவேண்டும்
எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது
நிச்சயம்
அவர்கள் அதைக் கடந்துவிடுவார்கள்
தத்தமது வாழ்வை
வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்புறமென்ன
நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது
நான் போய் வரவா.




