Art by : Mitya Fenechkin
மேடையில் நின்றுகொண்டு
பெருமித முகத்தோடு
கூட்டத்தைப் பார்த்து,
“என்னிடம்
எந்தக் கேள்விகளும் கேட்கலாம்,
எப்படிவேண்டுமானாலும்
கேட்கலாம்”
என்றேன்
ஒரு காலத்தில் உயரமாய் இருந்து
இப்போது குள்ளமாய் ஆகிவிட்ட
அந்த திமிர் பிடித்த கிழவி
மேடையேறி எதிரே நின்று
என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்
என்ன, என்னைக் காதலிப்பதாகச்
சொல்லப் போகிறாளா என்று
அஞ்சியபடி நின்றேன்
அவளோ
அந்த சிமிட்டாத கண்களால்
நீராலான கேள்வியைக்
கேட்டுத் தொலைத்தாள்
முதல்முறையாக
மேடைவிட்டு கீழிறங்கி
ஓட முயன்றேன்.
குழிப் பறித்து ஊன்றியதுபோல்
மொத்த ஜனமும் முறுக்கிக்கொண்டு
நின்றது.
குற்றம் புரிந்து தப்பிப்பதுபோல்
அவ்வளவு எளிதாக இல்லை
செய்யாத குற்றத்தின் முன்பிருந்து
தப்பிப்பது.




