செம்பருத்தி
படுக்கையில் வீழ்ந்துவிட்ட
எதிர்வீட்டு பாலகனை
தொடர்ந்து
சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்கள்
தினமும்
வாசலில் நிற்கும் செடியிலிருந்து
செம்பருத்தியைக் கிள்ளி
கடவுளின் முன் வைத்து
பார்வை மங்க வேண்டுகிறார்கள்
என்ன நோய் என்று
அவர்கள்
வெளியில் யாரிடமும் கூறவில்லை
என்றாலும்
ஆளுக்கொரு தீவிர நோயின் பெயரை
முடிவுசெய்துகொண்டனர்
யாரோ ஒருவர்
விரைவில் அவன் தேறி வருவான்
என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது
அடுத்த நாளே
அவர்கள் அந்த செம்பருத்திச் செடியை
சரமாரியாக
வெட்டி வீசிவிட்டார்கள்.
⦾
நற்கல்
அந்த சிறு கல்
நேரே அவன் வீட்டுக்குச் சென்று
அவனை கைப்பிடித்து அழைத்து வரவில்லை
அவன்
மலையேற முடியாமல் திணறியபோது
அலேக்காகத் தூக்கி வரவில்லை
இந்த உச்சியில் தான் நிற்கவேண்டுமென
நிர்பந்திக்கவில்லை
அவனே கிளம்பி வந்தான்
அவனே மலையேறினான்
அவனே உச்சியில் நின்றான்
அச் சிறு கல் செய்ததெல்லாம்
கொஞ்சமாக புரண்டு படுத்து உதவியது மட்டும்தான்
மற்றபடி அதற்கு ஒன்றுமே தெரியாது.
⦾
இறுதி விருப்பம்
நான் சிறுவயதிலிருந்து
உள்ளாடை அணிவதில்லை என்ற உண்மையை
அறிய நேரும் யாரும் கண் கலங்குகிறார்கள்
தழுதழுக்கும் நாவால்
நான்கு ஜோடி வாங்கித் தரவா என்கிறார்கள்
நேற்றுகூட
படுத்த படுக்கையாகிவிட்ட
நண்பரொருவரைக் காண
மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்
அவர்
நான் சாவதற்குள்
ஒருமுறையேனும் உன்னை
ஜட்டியோடு பார்க்க வேண்டும் என்றார்
நான் கண்கலங்கியபடி
படியிறங்கிக் கொண்டிருந்தேன்.
யாரோ சிலர் கோசமிட்டபடி சென்றனர்,
தனியொரு மனிதனுக்கு
ஜட்டியில்லை இல்லையெனில்
ஜெகத்தினை அழித்துவிடுவோம்.




