Illustration : Aleksandra Czudżak
தயை
என்னிடம் ஒரு அழகான
நிலைக் கண்ணாடி இருந்தது
மோசமாக உணரும்போதெல்லாம்
சென்று
அதன் முன் நிற்பேன்
காரி துப்போ துப்பெனத் துப்புவேன்
சற்று நேரத்தில்
அது என்னை
ஈசலின் இறகைவிடவும் லேசாக்கிவிடும்
நேற்று
எவரோ அதை திருடிச் சென்றுவிட்டார்கள்
அதைத் தேடி அலைந்த படலத்தின் இறுதியில்தான்
உங்கள் வீட்டு அழைப்பு மணியை
அழுத்தும்படியாகிவிட்டது
தயவுசெய்து
கோபித்துக்கொள்ளாமல்
உள்ளே சென்று
அந்த கண்ணாடியை மட்டும் கொண்டு வந்து
என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
⦾
கருணை
வழமையாக செல்லும் தேநீரகத்துக்கு எதிரே
ஒரு வாழிடமுள்ளது
அதில் ஏகப்பட்ட எலிகளும்
பெருக்கான்களும் வசிக்கின்றன
எதற்கென்று தெரியவில்லையென்றாலும்
அவை
வெளிவருவதும் உள்செல்வதுமாக இருக்கின்றன
ஆட்சேபனை இல்லையெனில்
கைகூட தட்டலாம்
அது அப்படியொரு
அருமையான விளையாட்டு
தேநீர் ஆறுவதுகூட தெரியாமல்
மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
பக்கத்தில் அமர்ந்திருந்தோரும்
சாலையில் சென்றோரும்
என்னோடு சேர்ந்துகொண்டனர்
அதில் ஒருவர் சொன்னார்,
மகிழ்ச்சியை இவ்வளவு கிட்டப் பார்த்து
எவ்வளவு நாளாகிவிட்டது
அவர் முகத்தை
உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னேன்,
புரிகிறது.
⦾
தாட்சண்யம்
முதல் வரிசையில் அமர்ந்திருப்பது
எண்ணெய் தெறித்த தளும்பு
இரண்டாம் வரிசையில் அமர்ந்திருப்பது
பிளேடால் அறுத்துக்கொண்ட தளும்பு
மூன்றாம் வரிசையில் அமர்ந்திருப்பது
சிகரெட்டால் சூடு வைத்துக்கொண்ட தளும்பு
மூன்றும்
ஒன்றையொன்று பார்த்துக்கொள்கின்றன
தத்தமது கதைகளை பரிமாறிக்கொள்கின்றன
பிறகு மூன்றும் சேர்ந்துகொண்டு
பேருந்தேறுகின்றன
எந்த ஊரிலோ இறங்குகின்றன
எந்த வீதியிலோ நடக்கின்றன
எந்த கதவையோ தட்டுகின்றன
எவ்வளவு தட்டியும் திறக்கப்படவேயில்லை
அந்தக் கதவும் எந்தக் கதவும்.




