உவர் மொழி
என் கண்களை
அழுதழுது சிவக்கச் செய்த துயரம்
என் மனமாக மாறி
ஒரு சுயமி எடுத்து
என்னிடமே காண்பித்தது
அதன் நிறமேறிய
எனது கண்களை சட்டகமிட்டு
வாழ்க்கைக்குள் மாட்டிவிட்டு
சுவருக்குள் சென்று மறைந்தது
நான் சதா அதை பார்த்துக்கொண்டே
அமர்ந்திருந்தேன்
முன்பில்லாத ஒரு கவர்ச்சி
கண்களில் குடிகொண்டிருப்பதாக
பின்னிருந்து ஒரு கும்பல் சொன்னது
நான் எனது சம்மட்டியை
சுவரை நோக்கி உயர்த்தி அடித்தேன்
எல்லாம் தரைமட்டமானது
ஆயினும்
அந்த சட்டகம் மட்டும்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
அதன் பின்னிருந்து
செவி கூசச் செய்யுமொரு சிரிப்பொலி
வந்துகொண்டே இருந்தது.
⦾
சாகச குஜிளி
ஏரியாவையே
கட்டிக் காத்த குஜிளி
இப்போது
விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டாள்.
அவள் முன்புபோல
சீறுவதோ குரைப்பதோ
கோழியைத் துரத்தி
உஷ் காட்டுவதோ இல்லை.
மாறாக
மிகவும் சாதுவாக
ஜீவனே என்று
ஒரே இடத்தில் படுத்துகிடக்கிறாள்
ஆனாலும்
சிலசமயம் அவளுக்கும்
எங்கேனும் செல்லத் தோன்றுகிறது
அப்போதெல்லாம்
எழ முயல்கிறாள் – எழுந்து நிற்கிறாள்
அவளைக் கேட்காமல் – அவள் சொல் கேட்காமல்
ஒரு கால் மட்டும் தனியாக
காற்றில் ஆடியபடி இருக்கிறது.
⦾
நாயும் நாயாக
வாசலில் நின்று
ஷூ அணிவதைக் கண்ட நாய்
தனது
உற்சாகத்தைக் குரைத்துக் குரைத்து
வெளிப்படுத்தியது.
கூண்டைத் திறந்து
வாரைப் பிடித்துக்கொண்டு
காலை நடைக்குக் கிளம்பினார்
வீடு திரும்பியதும்
நாயோடு சேர்ந்து
அவரும்
கூண்டுக்குள் சென்று
கதவை மூடிக்கொண்டார்
ஒரு நாய்
இன்னொரு நாயின் முகத்தை
நக்கிக்கொடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாய் இன்னொரு நாயின் தலையை
நீவிக்கொடுத்துக்கொண்டிருந்தது.
⦾
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை…
நான் உண்டானது தெரிந்ததும்
வயிற்றைத்
தொட்டுப் பார்த்து தொட்டுப் பார்த்து
குதூகலமடைந்தவள்
உள்ளிருக்கும்போதே
அவசரப்பட்டு
சந்தோஷம் எனப் பெயர் வைத்தாள்
நானோ ஒரு நாள்
அவளின் அழகிய வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவந்தேன்
வாழ்வின் சகல குண்டு குழிகளிலும்
விழுந்தெழுந்த ஒருவர்,
என் கால்களைப் பிடித்து
தலைகீழே தொங்கவிட்டு
என் முகத்தைப் பார்த்து
மூன்று முறை உச்சரித்தார்,
குறைவொலியில் – துயரமே
மிதவொலியில் – துயரமே
உயரொலியில் – துயரமே
திமிறிக்கொண்டு கீழே குதித்து
ஓட ஆரம்பித்தேன்.
அவர் என்னை
ஒண்டிவில்லால் குறிபார்த்தார்
நான் திரும்பி
எனது துப்பாக்கியால்
அவரை சுட்டுத் தள்ளிவிட்டு
காலை உந்திப் பறந்தேன்
விண்ணுக்கு.





சிறப்பு தோழர்