ஒரு நாளின் துவக்கம்
அம்மா சொன்னாள்,
ஒரு அம்மாவாக மாறுவதற்கு
நான் எந்த பள்ளிக்கூடத்துக்கும் போய்
கற்றுக்கொண்டு வரவில்லை.
அது இயல்பாகவே வந்தது.
நான் உன் வாயில் பால் புட்டியை வைத்தால்
நீ சந்தோஷமாக இருப்பாய்
அதை சீக்கிரம் வெளியே எடுத்துவிட்டால்
அழுவாய்
நான் உன்னை தனியே விட்டுச் சென்றால்
உனக்கு சலிப்பு உண்டாகும்.
எனக்கென்ன ஆச்சரியமெனில்
அதன்பிறகான இத்தனை வருடங்களில்
இன்னும் உனக்கு
மகனாக நடிக்கத் தெரியவில்லை என்பதுதான்.
உனக்காக நான் எவ்வளவோ
கற்றுக்கொண்டிருந்தபோது,
நீ எனக்காக
ஒன்றையுமே கற்றுக்கொள்ளவில்லை.
ஒரே ஒரு விஷயம் மட்டும் கற்றுக்கொண்டாய்,
அது,
உன் அறைக்குள் நுழைவதையும்
கலைந்துகிடக்கும் படுக்கையைப் பார்ப்பதையும்
நான் வெறுக்கிறேன் என்பதுதான்.
என்னைப்பொருத்தவரையில்,
அதுவல்ல ஒரு நாளின் துவக்கம்,
படுக்கையை
நீ சரிசெய்வதிலிருந்து மட்டுமே துவங்குகிறது
ஒரு காலை.
⦾
தாமதமாக பேசியவர்
அம்மா சொன்னாள்,
உனக்கு மூன்று வயதாகியும் பேச்சே வரவில்லை
நாங்கள் உன்னை
மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போனோம்
அதற்குத் தயார் ஆனதும்
நீயாகவே பேசுவாய் என்றவர்
எங்களை கவலைப்படாமல்
இருக்கச் சொன்னார்
அடுத்த வருடமே
நீ பேச ஆரம்பித்துவிட்டாய்
இப்போது எங்களால்
உனது வாயை அடைக்கவே முடியவில்லை
நாங்கள் அந்த பழைய,
வசந்த நாட்களை நினைவுகூர்கிறோம்.
நாங்கள் ஏன்
உன்னை மாற்ற நினைத்தோமோ…
உன்னால் பேசமுடியாதபோது
எவ்வளவு நன்றாக நடந்துகொண்டாய்.




