Art by : TatyanaZarArt
காலை 5.30 க்கு
காதலியோடு கடல் முன்னமர்ந்தேன்
தனது வீட்டாட்களின் முகம் கண்டு
தாவி வரும் நாயென
அலைகள்
எங்களை நோக்கிப் பாய்ந்துவந்தன
திரைக்குப் பின்னிருக்கும் கதாநாயகனென
ஆதவன்
மேகத்துக்குப் பின்னால் மறைந்திருந்தான்
அவனது நிழலோ
வானுக்கு மென் ஆரஞ்சு நிறம் பூசி
அவன் வரவை
இவ்வுலகுக்கு அறிவித்தது
ஆதவன்
உள்ளிருந்தபடியே
கொஞ்சம் கொஞ்சமாக
வானத்தின் இருண்ட பஞ்சுத் தோல்களை
ஒவ்வொரு அடுக்காக உரித்துப் போட்டுக்கொண்டிருந்தான்
நாங்கள்
இதழ்களைப் பரிமாறிக்கொண்டோம்
வாட்டியெடுத்த பண்டம் தரும்
நெருப்பின் சுவையை
அனுபவித்த எங்கள் உதடுகள்
மென் ஆரஞ்சு நிற
வானத் துண்டுகளாக மாறிவிட்டிருந்தன.
ஆதவன்
ஒரே சமயத்தில்
கடலுக்குப் பின்னிருந்தும்
அவளின் முலைகளுக்கு நடுவிலிருந்தும் தோன்றினான்.
நானவள்
ஒளி நிரம்பிய மஞ்சள் முலைகளை
இரு கைகளால் ஏந்தி உண்டேன்
உலகம் வெளிச்சமானது.




