– Illustration dani sanchis
“எங்களிடம் தங்க மீன்கள் இருந்தன,
அவை ஜன்னலை மூடியிருந்த
கனத்த திரைச்சீலைகளுக்கு அருகில்
மேஜையின் மீதிருந்த கண்ணாடிக் குடுவைக்குள்
சுற்றிச் சுற்றி வட்டமடித்தன.
எனது அம்மா எப்போதும் சிரித்த முகமாய் இருப்பாள்
நாம் அனைவரும்
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றவள்
“சந்தோஷமாய் இரு ஹென்றி” என்றாள்
அவள் சொல்வதும் சரிதான் :
சந்தோஷமாய் இருக்க இதுவொரு சிறந்த வழி,
உங்களால் முடிந்தால்.
ஆனால் எனது அப்பா
வாரத்தில் பலமுறை
என்னையும் அவளையும்
தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருப்பார்
6X2 அடி உயரமுள்ள
தனது சட்டகத்திற்குள்
தன்னை உள்ளிருந்து தாக்குவது எது என்று புரியாததால்
சீற்றமடைந்தார்.
எனது அம்மா, பாவப்பட்ட மீன்
சந்தோஷமாக இருக்க விரும்பினாள்
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை
அடி வாங்கிக்கொண்டு,
என்னிடம் வந்து சந்தோஷமாக இருக்கச் சொல்கிறாள் :
“ஹென்றி, சிரி
ஏன் எப்போதும் சிரிக்கவே மாட்டேன் என்கிறாய்”
அப்புறம்
எப்படிச் சிரிக்கவேண்டுமென்றும் எனக்குக் காட்டினாள்.
அது நான் பார்த்ததிலேயே சோககரமான சிரிப்பு.
ஒருநாள் அந்த ஐந்து தங்க மீன்களுமே இறந்துவிட்டன
கண்கள் திறந்தநிலையிலேயே
தண்ணீரில் ஒருபக்கமாக சுழன்றுகொண்டிருந்தன
அப்பா வீட்டுக்கு வந்ததும்
அவற்றைக் கொண்டுபோய் பூனைகளுக்கு வீசினார்
சமையலறையின் தரையில் அவை கிடந்தன
அம்மா சிரிப்பதை நாங்கள் பார்த்தோம்.





