தமிழில் : நெகிழன்
அவள் கவர்ச்சியானவள், மிகவும் சூடானவள்,
அவளை, வேறு யாரும் அடைவதை நான் விரும்பவில்லை.
இப்போது நான்
வீட்டுக்குச் செல்லவில்லையெனில்
அவள் சென்றுவிடுவாள்
என்னால் அதைத் தாங்கமுடியாது.
எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.
எனக்குத் தெரியும்
இது முட்டாள்தனமானது என்றும்,
சிறுபிள்ளைத்தனமானது என்றும்
ஆனாலும் நான்
இதில் மாட்டிக்கொண்டேன்.
வசமாக மாட்டிக்கொண்டேன்.
நான் எல்லா அஞ்சலையும்
கொடுத்து முடித்துவிட்ட பிறகு
ஹேண்டர்ஸன்
இரவில் அஞ்சல் எடுத்துச் செல்லும்
பழைய வண்டியை
எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்
மோசமான விஷயமென்னவென்றால்
வண்டி பாதி வழியிலேயே சூடாக ஆரம்பித்துவிட்டது
இரவாகிக்கொண்டிருந்தது
வனப்பான என் மிரியத்தை நினைத்துக்கொண்டே
அஞ்சல்கள் நிரம்பிய சாக்கோடு வண்டியிலிருந்து குதித்தேன்
இஞ்ஜின் தொடர்ந்து சூடேறியதால்
வெப்பத்தின் அளவைக் குறிக்கும் முள் உயர்ந்து நின்றது
சூடு, மிரியத்தைப் போல சூடு
வெளியே குதித்தேன்
நிலையத்திற்குள்
மேலும் மூன்று உருப்படிகள் இருந்தன
எனது கார்
என்னை மிரியத்திடம்
அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கும்.
ஐஸ்கட்டிகள் மிதக்கும் மதுவோடு
எனது நீல நிற ஷோபாவில்
யாரோ அமர்ந்திருக்கிறார்கள்
அவள்,
கால் மேல் கால்போட்டுக்கொண்டு
காலாட்டிக்கொண்டிருக்கிறாள்
இன்னுமிரண்டே நிறுத்தங்கள்…
வண்டி சமிக்ஞை விளக்கிடம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது
நாசமாய்ப்போனதென்று ஓங்கி உதைத்தேன்
மீண்டும்…
நான் 8 மணிக்கு வீட்டிலிருக்கவேண்டும்
8 மணிதான் மிரியம் எனக்களித்த இறுதி அவகாசம்
கடைசி வேலையும் முடித்துவிட்டேன்.
வண்டிக் கோளாறாகி நிற்கும் சமிக்ஞை விளக்கு
நிலையத்திலிருந்து பக்கம் தான்
வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை
என்னால் ஸ்டார்ட் செய்யமுடியவில்லை.
வண்டியின் கதவைச் சாத்திவிட்டு
பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு
நிலையத்தை நோக்கியோடினேன்…
சாவியைக் கீழே எறிந்துவிட்டு…
வெளியேறுகையில்
பிகோ மற்றும் வெஸ்ட்டனை நோக்கி,
“உங்கள் வீணாய்ப்போன வண்டி
சமிக்ஞை விளக்கிடம் நின்றுவிட்டது”
என்று கத்திவிட்டு கூடத்தில் இறங்கியோடினேன்.
சாவியை நுழைத்ததும் கதவு திறந்துகொண்டது.
அங்கே அவளது மதுக் கோப்பையும்
ஒரு குறிப்பும் இருந்தது.
தேவடியாப் பையனே :
சாப்பிட்டதிலிருந்து
5மணி வரைக் காத்திருந்தேன்.
நீயொரு தேவடியாப் பையன்,
நீ எனைக் காதலிக்கவே இல்லை
நாள் முழுவதும் காத்திருந்தேன்
யாரேனும் என்னைக் காதலிக்கக் கூடும்.
மிரியம்
மதுவை ஊற்றிக்கொண்டு
குளியல் தொட்டியில் நீரைத் திறந்துவிட்டேன்
இந்நகரத்தில் 5000 மதுக் கடைகள் உள்ளன
அவற்றில் 25 கடைகளிலேனும் மிரியத்தைத் தேடுவேன்.
அவளது ஊதா நிறக் கரடி பொம்மை
அக் குறிப்பைப் பிடித்தபடி
தலையணைக்கு எதிரே சாய்ந்தமர்ந்திருந்தது
நான் அதற்கு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்துவிட்டு
எனக்கான மதுவோடு
சூடான தண்ணீரில் இறங்கினேன்.




