காதலின் முகங்கள்

கலையும் காதலும் ஒன்றுதான். இவற்றைக் குறித்து நூறு பேரிடம் கேட்டால் நூறு பேரும் நூறு விதமாக பதில் சொல்வார்கள். ஒருவேளை அறுதியிட்டு இதுதான் இதுவென்று எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டால் அக்கணமே அவை காலாவதியை நோக்கி தமது மின்னல் வேக பயணத்தைத் தொடங்கிவிடும். எல்லோரின் கூற்றுப்படியும் காதல் சொர்க்கம்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது தனது சொர்க்கத்துக்குள் நரகத்தையும் வைத்திருக்கிறது என்பதையும் சேர்த்தே ஏற்றுக்கொள்கிறேன். காதல் கவிதைகள் பெரும்பாலும் காதல் தரும் மேலோட்டப் பரவசத்தையும் ஏக்க அலங்கார உணர்வுநிலையையும் முன்னிறுத்தியே விரிவதாக இருக்கிறது. இது எல்லாமே இலக்கியத்துக்கு வெளியில் நடப்பவையே. மாறாக இலக்கியத்துக்குள் குறிப்பாக கவிதைகள் காதலின் அபூர்வ கணங்களையும் அதை வைத்துக்கொண்டு மனிதர்கள் ஆடு பகடையாட்டங்களையும் ஒருங்கே பேசுகின்றன. எனது வாசிப்பில் எனை மிகவும் ஈர்த்த அதே சமயம் காதலின் வெவ்வேறு முகங்களைக் காட்டக்கூடிய சில நவீனக் கவிதைகளை இங்கு வைக்கிறேன். ஒற்றைத்தன்மையில் சிக்கவைக்கப்பட்ட காதலை சற்றே விடுவிக்க முயலும் சிறு எத்தனமாக இவை இருக்கலாம்.

(உன்) பெயர் – பிரமிள்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்…

சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

கலப்பு : புகைகள் – பிரமிள்

உயர்ஜாதிக் காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம்மோதி
ஊர் அதிர்ந்தது

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என்சேரி…

புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு..

முத்தம் – ஆத்மாநாம்

முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தக் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற்பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி
கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க
முத்தத்தை விட
சிறந்ததோர் சாதனம்
கிடைப்பதரிது

ஆரம்பித்துவிடுங்கள்
முத்த அலுவலை

இன்றே
இப்பொழுதே
இக்கணமே
உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி
காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்
கிறிஸ்து பிறந்து
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து
இருபத்தியோறாம் நூற்றாண்டை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து
சுத்தமாக முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று
முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்.

என் சன்னல்கள் – யூமா வாசுகி

என் சன்னல்களைத் திறந்தேன்
உன் முகம் கலைந்து பல்லாயிரம்
ஈசல்களாகப் பறக்கிறது

வெளிச்ச ஈர்ப்பிற்கு சன்னல்களுக்குள் நுழைபவை
என் ஓவியத்தாளின் வர்ண ஈரத்தில்
படிந்து புரள்கின்றன

அவற்றைத் தூரிகை முனையால் அகற்றுகிறேன்
விரலால் தடவி அப்புறப்படுத்துகிறேன்
காற்றூதித் துரத்துகிறேன்

இடையறாது காகிதத்தில்
ஈசல்கள் ஊர்கின்றன

நான் வரைய உத்தேசித்த்து
என்னை மீறுகிறது
ஈசல்களும் நானும்
சேர்ந்து வரைகிற ஓவியம்
எவ்விதம் பூர்த்தியாகும் என்று தெரியாது

எப்படியானாலும் நான்
சன்னல்களைச் சாத்தமாட்டேன்.

எதேச்சையாக பட்டுவிட்டது – இசை

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன

இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா

இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா

இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான்
அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி
அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான்
ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”

இதற்காகத்தான் எஜமானிகள்
பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான்
தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான்
தூங்கும்போது
தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான்
மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.

நீதியின் மன்றம் – இசை

அவள்
முதன்முதலாக
ஒரு கொலையை
கண்ணெதிரே கண்டாள்

அலறித் துடித்தவன்
அவள் காதலனாக இருந்தான்

மூவர்
கை கால்களை ஆட்ட விடாமல் பிடித்துக் கொள்ள
கொஞ்சம் கெட்டியான ஆப்பிளை
அறுப்பது போல
ஒருவன் குரல்வளையை
நறுக்கினான்.

அவள்
அவர்களை கொலையாளிகள் அல்ல என்றும்
முதலில்
அவன் தன் காதலனே அல்ல என்றும்
நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பொழுதில்
பார்வையாளர் வரிசையில்தான் அமர்ந்திருந்தது
காதல்.

அது
இதுபோல் எவ்வளவோ பார்த்துவிட்டது.

உனக்காக என் அன்பேழாக் ப்ரெவர்

தமிழில் : வெ. ஸ்ரீராம்

பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக என் அன்பே
பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை என் அன்பே.

மத்தியானம் – வெய்யில்

கிழவியின் குடிசை பற்றி எரிந்தது கனவில்
எவளின் மகளோ பருவமெய்தப் போகிறாள்
வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது
எழுந்து கூரைக்கு மேலே
பொழுதைக் கணித்துக்கொண்டாள்
சுண்ணாம்பு சற்றுக் கூடுதலாக
சேர்த்துக்கொண்ட வெற்றிலை எச்சிலை
‘பொழிச்’ என்று உமிழ்ந்தாள்
முற்றமெல்லாம் தெறித்து மணக்கிறது
இன்னும் ஊறிடாத் தூமை.

தலையில் கனத்த சும
அர்ணாக்கயிறு அறுந்து
வச்ச துணியும் கீழ விழுந்திருச்சி
கட்டிகட்டியா கொட்டுது
தொடையெல்லாம் ரத்தம் பிசிபிசுன்னு
வெயிலு வேற கொளுத்தியடிக்கு
பதனமா சொமய இறக்கிட்டு
குளத்துச் சகதியில பூத்திருந்த
ரெண்டு அல்லியப் பறிச்சி
‘அந்த’ இடத்துல வச்சி தண்டால முடிஞ்சிக்கிட்டேன்
அடிவயிறு வரைக்கும்
அப்பிடியே குளுந்து கெடக்கு
இந்தா… வீடும் கிட்ட நெருங்கிட்டு.

கிழவன் நல்ல மனுஷன்
பிராயத்தில
கிழவியோட தீட்டுத்துணிகளை
ஊருக்குத் தெரிய
ஆசையா ஆத்துல அலசிக் கொடுப்பான்
கொஞ்சம் குசும்பனும்கூட
நேத்து வாய் நிறைய்ய வெத்தலயக் குதப்பிக்கிட்டு
“இங்க பாருபுள்ள….
என் வாயெல்லாம் தூமை!” ன்னு சிரிக்கான்.
வெக்கத்துல கிழவிக்கு
நின்னுபோன தூம
பொங்குறமாதிரி இருந்திச்சாம்!.

வெள்ளிவீதியாரின் நாப்கின் – வெய்யில்

கபிலர் கனவு காண்கிறார் காட்டுப் பாதையில்
சிவந்த முல்லைப் பூக்கள் சிதறிக்கிடக்கின்றன
முல்லையிலேது சிவப்பென வியப்புற்று எழுகிறார்
கபிலரின் மனைவியும் கனவிலிருக்கிறார்

“தலைவியின் தூய்மைக்குருதி
கசியக் கசிய முல்லைப்பூக்களால் துடைத்தபடி
அவன் நடந்துகொண்டிருக்கிறான்”

மனைவியின் கனவிற்குள் நுழையும் கபிலர்
அவன் ஏந்தியிருக்கும்
வேர்களால் முடையப்பட்டக் கூடையில்
நிறைந்திருக்கும் வெண்பூக்களை
இருகைகளிலுமாக அள்ளியபடி வெளியேறி
மனைவியின் கால்மாட்டிற்கு வந்து
மிகப்பொறுப்போடு அமர்கிறார்.

சூடு! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழில் : நெகிழன்

அவள் கவர்ச்சியானவள், மிகவும் சூடானவள்,
அவளை, வேறு யாரும் அடைவதை நான் விரும்பவில்லை.

இப்போது நான்
வீட்டுக்குச் செல்லவில்லையெனில்
அவள் சென்றுவிடுவாள்
என்னால் அதைத் தாங்கமுடியாது.
எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.
எனக்குத் தெரியும்
இது முட்டாள்தனமானது என்றும்,
சிறுபிள்ளைத்தனமானது என்றும்
ஆனாலும் நான்
இதில் மாட்டிக்கொண்டேன்.
வசமாக மாட்டிக்கொண்டேன்.

நான் எல்லா அஞ்சலையும்
கொடுத்து முடித்துவிட்ட பிறகு
ஹேண்டர்ஸன்
இரவில் அஞ்சல் எடுத்துச் செல்லும்
பழைய வண்டியை
எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்
மோசமான விஷயமென்னவென்றால்
வண்டி பாதி வழியிலேயே சூடாக ஆரம்பித்துவிட்டது

இரவாகிக்கொண்டிருந்தது

வனப்பான என் மிரியத்தை நினைத்துக்கொண்டே
அஞ்சல்கள் நிரம்பிய சாக்கோடு வண்டியிலிருந்து குதித்தேன்

இஞ்ஜின் தொடர்ந்து சூடேறியதால்
வெப்பத்தின் அளவைக் குறிக்கும் முள் உயர்ந்து நின்றது

சூடு, மிரியத்தைப் போல சூடு

வெளியே குதித்தேன்
நிலையத்திற்குள்
மேலும் மூன்று உருப்படிகள் இருந்தன

எனது கார்
என்னை மிரியத்திடம்
அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கும்.

ஐஸ்கட்டிகள் மிதக்கும் மதுவோடு
எனது நீல நிற ஷோபாவில்
யாரோ அமர்ந்திருக்கிறார்கள்
அவள்,
கால் மேல் கால்போட்டுக்கொண்டு
காலாட்டிக்கொண்டிருக்கிறாள்

இன்னுமிரண்டே நிறுத்தங்கள்…

வண்டி சமிக்ஞை விளக்கிடம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது
நாசமாய்ப்போனதென்று ஓங்கி உதைத்தேன்
மீண்டும்…

நான் 8 மணிக்கு வீட்டிலிருக்கவேண்டும்
8 மணிதான் மிரியம் எனக்களித்த இறுதி அவகாசம்

கடைசி வேலையும் முடித்துவிட்டேன்.

வண்டிக் கோளாறாகி நிற்கும் சமிக்ஞை விளக்கு
நிலையத்திலிருந்து பக்கம் தான்
வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை
என்னால் ஸ்டார்ட் செய்யமுடியவில்லை.
வண்டியின் கதவைச் சாத்திவிட்டு
பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு
நிலையத்தை நோக்கியோடினேன்…

சாவியைக் கீழே எறிந்துவிட்டு…
வெளியேறுகையில்
பிகோ மற்றும் வெஸ்ட்டனை நோக்கி,

“உங்கள் வீணாய்ப்போன வண்டி
சமிக்ஞை விளக்கிடம் நின்றுவிட்டது”

என்று கத்திவிட்டு கூடத்தில் இறங்கியோடினேன்.

சாவியை நுழைத்ததும் கதவு திறந்துகொண்டது.
அங்கே அவளது மதுக் கோப்பையும்
ஒரு குறிப்பும் இருந்தது.

தேவடியாப் பையனே :

சாப்பிட்டதிலிருந்து
5மணி வரைக் காத்திருந்தேன்.
நீயொரு தேவடியாப் பையன்,
நீ எனைக் காதலிக்கவே இல்லை
நாள் முழுவதும் காத்திருந்தேன்
யாரேனும் என்னைக் காதலிக்கக் கூடும்.

மிரியம்

மதுவை ஊற்றிக்கொண்டு
குளியல் தொட்டியில் நீரைத் திறந்துவிட்டேன்
இந்நகரத்தில் 5000 மதுக் கடைகள் உள்ளன
அவற்றில் 25 கடைகளிலேனும் மிரியத்தைத் தேடுவேன்.
அவளது ஊதா நிறக் கரடி பொம்மை
அக் குறிப்பைப் பிடித்தபடி
தலையணைக்கு எதிரே சாய்ந்தமர்ந்திருந்தது
நான் அதற்கு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்துவிட்டு
எனக்கான மதுவோடு
சூடான தண்ணீரில் இறங்கினேன்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x