மார்ஜ் பிர்சி கவிதை
நண்பன்
மேசையின் குறுக்காக அமர்ந்தோம்
அவர்கள் சதா கேலி செய்துகொண்டே இருந்தார்கள்
அவர்கள் என்னை, கைவைக்கவும் செய்யலாம்
உன் கைகளை வெட்டிக்கொள் என்றான்
சரி என்றேன்
மேசையின் மீது உணவு குளிர்ந்துகொண்டிருந்தது
உன்னுடலை எரித்துவிடு,
சுத்தமற்று துர்நாற்றம் வீசும் கலவிபோல
அது என் மனதைப் புண்படுத்துகிறது என்றான்
சரி என்றேன்
நான் உன்னை நேசிக்கிறேன் என்றேன்
அது, மிகவும் நல்லது,
நான் நேசிக்கப்படுவதை விரும்புகிறேன்
அதுவே என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது என்றவன்
இன்னுமா உனது கைகளை வெட்டுகிறாய் என்றான்.
⦾
கர்னலிஸ் எடி கவிதை
பலத்த காற்றில் காகங்கள்
காகங்கள் கூரையிலிருந்து விலகியோடின
காகங்களால் தாங்கமுடியாது.
அவையும் இருக்கலாம்
எண்ணெய்ப் பிசுபிசுப்பின் மீது அமர்ந்துகொண்டு.
கறுப்புப் புள்ளியிட்ட கோட் அணிந்த பெரியமனிதர்கள்
மிக ராவாக நடனமாடினார்கள்.
அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாதது போல
அவ்வளவு வெறித்தனமாக ஆடினார்கள்.
அதி கோமாளித்தனமான நடனத்தை
அவர்கள் சரிசெய்ய நினைத்தபோது
காற்று அதைக் கெடுத்தது.
மிக சோகமான நடனம்.
எல்லோரின் முன்பாகவும் பிசகும்போது
விருப்பமானதே எவ்வளவு சங்கடமாகிவிடுகிறது.
⦾
சுனில் அபிமன் அவச்சர் கவிதைகள்
ஆங்கிலத்தில் : சொனாலி விஜய் ரோட்
நான் எனது கூட்டைவிட்டு வெளியேறினேன்.
வலி எனக்கு
சிறகுகளைக் கொடுத்தது!
⦾
சுவற்றிலிருக்கும் ஓவியத்தில்
கறுப்பு நிறத்தில் இருப்பதென்ன?
என்ன… மனிதனா?
ஆமாம், மனிதன்.
நிச்சயமாக மனிதனே.
கொதிக்கும் இரும்புக் கம்பியால்
அவ்வோவியத்தின் கண்களை பெயர்த்தெடுத்தது யார்
ஓடு..
உன் வாழ்க்கைக்கு ஓடு
அவன் எதிர்காலத்தை வரைந்திருக்கிறான்!
ஓடு..
⦾
…………………………………………………………………………………………………………………..
ஓவியரும் கவிஞருமான சுனில் அபிமன் அவச்சர் மராத்தியைச் சேர்ந்தவர்.
இது, இவரது எங்கள் உலகம் விற்பனைக்கல்ல “Our WORLD is not for SALE” என்ற
(A – R ) தொடர் கவிதையில் உள்ள ‘F’ என்ற சிறு பகுதி மட்டுமே.




