ஞாயிற்றுக்கிழமை,
நான் பப்ளிமாஸ் பழம்
சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
மேற்கில் ரஷ்ய மரபுவழி
தேவாலயக் கூட்டம் முடிந்தது.
கிழக்கு வம்சாவளியின் கறுப்பு நிறத்திலிருந்த அவளது
பெரிய பழுப்பு நிறக் கண்கள்
பைபிளிலிருந்து நிமிர்ந்து
மீண்டும் கவிழ்ந்தன
சிறிய கறுப்பு சிவப்பு நிற பைபிளை
அவள் வாசிக்க
அவளது கால்கள்
மெல்ல அசைந்துகொடுத்தன.
பைபிளை வாசித்தபடியே
அவள் மெதுவான இசைநயமான
நடனமிட்டாள்..
பெரிய தங்க வளையத் தோடுகள்
கைக்கு இரண்டு என தங்க வளையல்கள்
குட்டை ஆடை அணிந்திருந்தாள்
நான் நினைக்கிறேன்,
அந்த ஆடையானது
அவளுடலை அணைத்திருப்பதாய்.
அந்த ஆடை மென் பழுப்பு நிறத்திலிருந்தது.
இப்படியும் அப்படியும் திரிகிறாள்,
அவளது நீண்ட மஞ்சள் நிறக் கால்கள்
வெயில் காய்கிறது.
என்னால் அங்கிருந்து தப்பவே முடியாது
தப்ப விருப்பமும் இல்லை.
எனது வானொலி
சிம்பொனி இசையை ஒலிக்கவிட்டது
அதை அவள் கேட்கவில்லை
எனினும்
அவளது இசைநய அசைவுகள்
சிம்பொனியோடு
மிகத் துல்லியமாக ஒத்துப்போனது.
கறுப்பான அவள், கறுப்பான அவள்,
கடவுள் குறித்து வாசிக்கிறாள்.
நான்தான் கடவுள்.




