மலையாளப் படம் பார்த்தேன் என்று பொதுவெளியில் சொல்ல முடியாத ஒரு காலம் இருந்தது. அப்போதும் கலைத்துவமான படங்கள் மலையாளத்தில் வெளிவந்தன என்றாலும் இங்கு திரையிடப்பட்டவை பெரும்பாலும் “பிட்டு படம்” எனக் கூறப்படும், பாலியல் இச்சைகளுக்குத் தீனி போடும் படங்களே. மலையாளப் படங்களுக்கு அளிக்கப்பட்ட அந்த மோசமான முகம் மாற மிகவும் உதவியது இணையத்தின் வருகையும் OTT ன் வருகையுமே. இணையம் உலகத்தையே திறந்துப்போட்டு வேண்டியதை எடுத்துக்கொள் என்று சொன்னது. OTTயோ இணையத்தைத் தாண்டி ஒருபடி மேல் சென்று உலகளவில் திரைப் படங்களுக்கான மாபெரும் சந்தையை உருவாக்கியது. அதுமட்டுமில்லாமல் அந்தந்த மொழியில் எடுக்கும் படங்களை அங்கேயே வைத்துக்கொள்ளும் மனநிலையிலிருந்து வெளியேற்றி தமது பிராந்திய மொழிகளில் சிலவற்றுக்கும் மொழிமாற்றி வெளியிடும் ஒரு எண்ணத்தை உருவாக்கி ஒரு போக்கையே மாற்றியமைத்திருக்கிறது.
இதற்குமுன் இந்த அளவுக்கு வேற்று மொழிப்படம், அதுவும் தனது சொந்த மொழியிலேயே வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் வெளியீடு கண்டு கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. ஆக, இத்தனைக் கொண்டாடுமளவுக்கு படத்தில் எதைக் கண்டார்கள், எது அவர்கள் எல்லோரையும் ஒருசேர ஈர்த்தது என்ற யோசனை உள்ளுக்குள் ஓயவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும், ஆனால் எல்லோருக்கும் ஒரே ரசனை என்றால் அங்கேதான் இடிக்கிறது. ஒத்த ரசனையுள்ளவர்களும் இருக்கலாம் அது பத்தில் மூன்றோ நான்கோ பங்குதான் இருக்க முடியும். இதுவும் கூட சற்று அதிகம்தான் என்றாலும் ஒரு உரையாடலுக்காக இப்படி வைத்துப் பார்க்கலாம்.
எப்போதும் உலக அளவில் தொடர்ந்து வெவ்வேறு வகையான சினிமா பார்க்கும் ஒரு கூட்டம் மலையாள சினிமாவைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும், அதே சமயம் இன்னொரு கூட்டம் இதெல்லாம் ஒரு படமா தமிழில் இந்த படத்தின் கால் தூசிக்கு ஆகுமா என்றெல்லாம் விவாதம் காரசாரமாகவே போகும். ஆனால் இப்போது இந்த படத்தை இன்று பிறந்த குழந்தை கூட ஏற்றுக் கொண்டாடுகிறது. அப்படி என்னதான் கண்டுவிட்டார்கள் என்ற கேள்வி என்னை இளையராஜாவிடமும் கமலிடமும் கொண்டு போய் நிறுத்தியது. இந்தப் படத்தைக் கொண்டாடும் அல்லது ரைட்டப் எழுதும் எல்லோரையும் உற்று கவனித்தால் இவர்கள் அனைவரும் ஒன்றிணையும் முதற்புள்ளியும் முக்கியப்புள்ளியும் ராஜாவும் கமலும்தான்.
தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் உள்ள பகை மறைமுகமானதாக சிலருக்குத் தோன்றினாலும் அது அப்பட்டமானது என்றுதான் சொல்லவேண்டும். மலையாளிகள் தங்கள் படங்களில் வரும் தமிழ்ப் பாத்திரத்தை பெரும்பாலும் படத்தில் சாகடித்துவிடுவார்கள். அல்லது ஏதோ ஒரு நோய்வாய்ப்படும் பாத்திரமாக வைப்பார்கள். தமிழர்கள் தங்கள் படங்களில் மலையாளப் பெண்கள் என்றால் எப்போதும் முலைகளைக் காட்டிக்கொண்டுதான் இருப்பார்கள், கண்கள் காட்டினால் போதும் கால்களை விரித்துவிடுவார்கள் என்கிற ரீதியில் தான் காண்பிப்பார்கள். ஆக மறைமுகப் போர் ஒன்று காலகாலமாக இரு தரப்புக்குள்ளும் நிகழ்ந்துகொண்டே இருப்பது தெரிகிறது.
நிலமை இவ்வாறிருக்க ஒரு மலையாளப்படத்தை தமிழர்கள் கொண்டாடித் தீர்ப்பது என்பது மலையாளிகளுக்குக் கிடைத்த வெளிப்படையான வெற்றியல்லவா என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. இங்குதான் மலையாளிகள் ஏமாறுகிறார்கள் தமிழர்கள் ஏமாற்றுகிறார்கள்.
இந்த படம் உருவாக அடிப்படையே கமலின் குணா தான். அதற்கு உயிரூட்டியது ராஜாவின் இசைதான். இவ்விரண்டுதான் கொண்டாடப்படுபவர்களால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகிறது. ஆக, குணாவை இப்படத்தின் உடல் என வைத்துக்கொள்லலாம். ராஜாவின் இசையை உயிர் என வைத்துக்கொள்ளலாம். இப்போது கவனித்தால் இவர்கள் கொண்டாடுவது கமலின் உடலையும் ராஜாவின் உயிரையும் தான். எங்கள் கமலும் எங்கள் ராஜாவும் இல்லையென்றால் உங்களால் ஒன்றும் கழற்ற முடியாது என்று மறைமுகமாக உரக்கக் கூவுவது.
சாதிப் பெருமை, வட்டாரப் பெருமை, மதப் பெருமை போல இப்படத்தின் அசுர வெற்றிக்குப் பின்னிருந்து இயங்குவது வெற்று நிலப்பெருமையே அன்றி வேறில்லை. இவ்வாறெல்லாம் நான் கூறுவதால் மஞ்சும்மெல் பாய்ஸில் ஒன்றுமில்லை என்று அர்த்தமில்லை. இவர்கள் கொண்டாடுவதில் ஒன்றுமில்லை என்பதே எனது தரப்பு.




