இது உங்கள் சொத்து
கூறில் அள்ளி வந்த காய்களின்
சொத்தைப் பகுதிகளை நீக்கிவிட்டு
குழம்பு வைக்கும் அம்மா
சந்தையில் சகாயமாக
வாங்கி வந்த ஆப்பிளின்
அழுகிய பாகத்தை அரிந்து வீசிவிட்டு
நல்லதை மட்டும்
தின்னக் கொடுப்பாள்
அப்படித் தின்று
பெருத்த உடல்தான் இது
ரொம்ப யோசிக்க வேண்டாம்
இதிலிருந்து
உங்களுக்கு வேண்டிய அளவு இறைச்சியை
வெட்டிக்கொள்ளுங்கள்
உங்களுக்கு
சற்று சுவாரசியம் தேவைப்பட்டால்
எனது அம்மாவின் முன்பு கூட
இதைச் செய்யலாம்
அவள் என்ன ஏதென்று
ஒன்றும் கேட்கமாட்டாள்
ஒருவேளைக் கேட்டால்
உதட்டைப் பிதுக்கிச்சொல்லுங்கள்,
இது சொத்தைப் பகுதி.
⦾
ஒரு பாரில்… ஒரு ஆசை…
எனக்கு இப்போதுள்ள ஒரேயொரு ஆசை,
நான் தலைக்கேறிய போதையில்
ரோட்டில் விழுந்து கிடக்கவேண்டும்
ஆடை விலகிக் கிடப்பதைக் கண்டு
போவோர் வருவோரெல்லாம் தூற்றவேண்டும்
நானறிவேன்
இதை எவரேனும் சென்று
நிச்சயம் என் வீட்டில் சொல்லிவிடுவர்
வீட்டு ஆட்கள் வந்து பார்க்கையில்
என் கைகால்களில் சிராய்ப்போ
என் மண்டையில் பொத்தலோ இருக்க வேண்டும்
இது மட்டும் போதுமா என்றால், போதாது
தவணையில் வாங்கிய
எனது கைபேசியைத் திருடி
அந்த பாரிலேயே கிடைத்த காசுக்கு விற்று
அதை ஒருவன் போதையாக்கி வீடு திரும்பவேண்டும்
ஆனால் என்னைப்போல் அல்லாது
அவன் தனது
சுந்தரத் தன்மையை
துளியும் சிந்திவிடாமல்
பத்திரமாகப் போய்சேர வேண்டும்.
⦾
சிரிப்பு நல்லது
கட்டுக்கடங்கா கோபத்தில்
விரலை வெட்டிக்கொண்ட
ஒரு நபரைப் பற்றிச் சொன்னவர்
கண்ணில் நீர் வரச் சிரித்தார்
கட்டுக்கடங்கா கோபத்தில்
தலைமயிரை மழித்துக்கொண்டு
பழனிக்கோ திருப்பதிக்கோ
போய் வந்ததாக சொல்லும் ஒரு நபரை
இவ்வுலகில்
நான் மட்டுமே அறிந்த
அந்த ஒரு நபரை நினைத்து
நானும்
கண்ணில் நீர் வரச் சிரித்தேன்.




