
அலமாறியின் மேலடுக்கில் தென்பட்ட
ஒரு ஜோடி நீல நிற ஜட்டிகளை எடுத்து
அவளிடம் காட்டிக் கேட்டேன்,
“இவை உன்னுடையதா”
என்னைப் பார்த்துவிட்டு,
“இல்லை, அவை ஏதாவதொரு
நாயுடையதாக இருக்கும்”என்று சொன்னவள்
அதற்குப் பிறகு கிளம்பிவிட்டாள்
அப்போதிருந்து நானவளைப் பார்க்கவேயில்லை.
அவள் தனது அறையிலும் இல்லை.
நான் திரும்பி
குறிப்புச் சீட்டு எழுதி மாட்டி வைக்கும்
கதவிடம் சென்றேன்
அதில் குறிப்புச் சீட்டு இருந்தது.
எனது கார் கண்ணாடியின் கீழிருந்த
சிலுவைச் சின்ன ஸ்டிக்கரை
பெயர்த்து வந்து
அதை ஷூ லேசால் கட்டி
அவள் வீட்டின் கைப்பிடியில்
மாட்டிவிட்டுவிட்டு
கவிதை நூலோடு வெளியேறினேன்.
நான் திரும்பிச்சென்றுவிட்டால்,
அடுத்த நாள் இரவும்
எல்லாமே அப்படியே இருக்கும்.
நான் இரத்த நிறக் காரை
தெருக்களில் தேடுகிறேன்
அவள் ஓட்டிச் சென்ற கார்
மின்கலம் பழுதடைந்து
கீல்கள் உடைந்து கதவுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
சுற்றியுள்ள தெருக்களெங்கும்
தேம்பிக்கொண்டே காரோட்டிச் செல்கிறேன்
கைகூடிய காதலையும்
எனது உணர்வையும்
நினைத்து வெக்கப்படுகிறேன்.
அதிர்ஷ்டம் எங்கே போனது
என்று வியந்தபடியே
மழையில் காரோட்டிக்கொண்டு போகிறான்
ஒரு குழப்பமான கிழவன்.




